இனவெறி கருத்துகளைக் கூறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு $5,000 பிணை!

 

 

கடந்த ஏப்ரல் 21- ஆம் தேதி அன்று, சிங்கப்பூரில் எஸ்.ஆர்.டி. ரயிலில் (MRT Train) முன்னாள் சொத்து முகவரான டான் பியோ ஹியோங் (Tan Beow Hiong) (வயது 57) என்ற பெண் பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த பெண், மற்ற பயணிகளைத் தனிமைப்படுத்தியதாகவும், அவர்களைப் பற்றி கேவலமான கருத்துகளைத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல், கடந்த மே 11- ஆம் தேதி அன்று எம்.ஆர்.டி. ரயிலில் பயணிகளுக்கு தொல்லைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக பயணிகள் கொடுத்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் டான் பியோ ஹியோங் என்ற பெண்ணை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

அந்த வகையில் இந்த வழக்கு நேற்று (02/07/2021) மாவட்ட நீதிபதி லோர்ரைனே ஹோ (District Judge Lorraine Ho) முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டான் பியோ ஹியோங் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிங் கெங் ஹுவாட் (Lawyer Sng Kheng Huat), “அவரது மனநல சுகாதாரத்தின் அறிக்கை (Institute of Mental Health- ‘IMH’) என்பதை அவர் புரிந்துக் கொண்டதாகத் தெரிவித்தார். மேலும், அவருக்கு கட்டாயச் சிகிச்சை உத்தரவை பரிசீலிக்க அரசு தரப்பு தயாராக இருக்கிறதா என பிரதிநிதித்துவப்படுத்துவேன்” எனத் தெரிவித்தார்.

 

கட்டாய சிகிச்சை உத்தரவைப் பெற்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சிறைத்தண்டனைக்கு முன் தங்கள் மனநலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதையடுத்து, அவரை $5,000 செலுத்தச் சொல்லி பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வரும் ஜூலை 30- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது டான் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இன அல்லது மத நல்லிணக்கத்திற்கு புறம்பான செயல்களைச் செய்ததாக டான் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை (அல்லது) அபராதம் (அல்லது) சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

 

ஒரு பொது தொல்லை என குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் (அல்லது) $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் (அல்லது) சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.