‘ஆடையின்றி நடமாடியவரைத் தாக்கிய நபருக்கு 13 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு!’

(Photo: TODAY)

 

சிங்கப்பூரில் உள்ள லிம் சூ காங்கிற்கு (Lim Chu Kang) அருகே கடலில் அமைந்துள்ள மீன் பண்ணையில் (எண். FC50W) ஆங் வின் ஹூட் (Aung Win Htut) (வயது 38) மற்றும் சா பாய்ங் சோ தூ (Saw Paing Soe Thu) (வயது 35) ஆகிய இருவரும் பணிப்புரிந்து வருகின்றன. இருவரும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

 

இந்த நிலையில், ஆங் வின் ஹூட் ஆடையின்றி மீன் பண்ணையைச் சுற்றி வந்தபோது அவரை சா பாய்ங் சோ தூ அவரைக் கண்டித்தார்.அதேபோல், மீண்டும் ஒருமுறை வேறொரு நாளில் குளித்துவிட்டு ஆடையின்றி அந்த நபர் சமைக்கும் பகுதி வந்திருக்கிறார்.

 

இதனை கண்டு ஆத்திரமடைந்த சா பாய்ங் சோ தூ மது அருந்திவிட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 9- ஆம் தேதி அன்று ஆங் வின் ஹூட்டை சுத்தியால் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ஆங் வின் ஹுட்டை மீட்டு ஜூராங் கிழக்கில் உள்ள ‘Ng Teng Fong General Hospital’ ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அவருக்கு நெற்றியில் ஆழமான வெட்டு மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டது, அதற்கு சிகிச்சைப் பெற்று வந்த ஆங் வின் ஹூட், மூன்று நாட்களுக்கு பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும், அவருக்கு ஒரு மாத விடுப்பும் வழங்கப்பட்டது.

இதனிடையே, சா பாய்ங் சோ தூவை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

இந்த வழக்கு நேற்று (06/07/2021) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆங் வின் ஹுட்டை சுத்தியால் தாக்கிக் காயத்தை ஏற்படுத்தியதை சா பாய்ங் சோ தூ ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவருக்கு 13 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

ஆபத்தான ஆயுதத்தால் வேண்டுமென்றே காயம் விளைவிக்கும் குற்றத்துக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை (அல்லது) பிரம்படி (அல்லது) அபராதம் (அல்லது) இவற்றில் ஏதாவது ஒரு தண்டனை விதிக்கப்படலாம்.