அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிய உட்லேண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம்!

Photo: SMRT Official Facebook Page

 

 

சிங்கப்பூரில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய உட்லேண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (New Woodlands Integrated Transport Hub) வரும் ஜூன் 13- ஆம் தேதி திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த போக்குவரத்து மையத்தில் இருந்து 25 பேருந்து சேவைகள் உட்லேண்ட்ஸ் வடக்கு- தெற்கு மற்றும் தாம்சன் கிழக்கு கடற்கரை எம்ஆர்டி லைனுடன் (Woodlands North- South and Thomson- East Coast MRT Lines) இணைக்கப்பட்டுள்ளது.

 

புதிய உட்லேண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்!

 

போக்குவரத்து மையம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து எண்கள், பேருந்து நிறுத்தப்படும் இடங்கள், பேருந்துகள் செல்லும் வழித்தடங்கள் உள்ளிட்ட விவரங்கள் டிஜிட்டல் பலகையில் வைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக எஸ்க்லேட்டர்கள் (Escalator) அமைக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் பயணிகள் அமருவதற்கு ஏதுவாக இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில் மையம் முழுவதும் அதிநவீன சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகளுக்கு உதவுவதற்காக ஸ்மார்ட் ரோபோக்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பயணிகள் தங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் விரைவாக செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் எஸ்எம்ஆர்டி பொது போக்குவரத்து நிறுவனம் (SMRT Public Transport) செய்துள்ளது. மேலும், பேருந்துகளிலும் குளிரூட்டப்பட்ட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 

சிங்கப்பூரில் பொது போக்குவரத்து பேருந்து, ரயில் சேவையில் எஸ்எம்ஆர்டி பொது போக்குவரத்து நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.