“சாங்கி விமான நிலையம் உயிரோட்டத்துடன் பரபரப்பாக …”- புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் நினைவுக்கூர்ந்த சிங்கப்பூர் பிரதமர்!

Photo: Singapore Prime Minister Lee Hsien Loong Official Facebook Page

ஆங்கில புத்தாண்டையொட்டி சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இன்று (31/12/2022) நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “2022-ஆம் ஆண்டில், நாம் நன்றியுடன் இருப்பதற்கு நிறைய தருணங்கள் இருந்தன. ஈராண்டுக்கும் மேலாக கோவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராகப் போராடிய பிறகு, வழக்கநிலை திரும்புகிறது. கிருமிப்பரவல் தொடங்கிய பின்னர், நாம் நமது முழுமையான தேசிய தின அணிவகுப்பை முதன்முறையாக நடத்தினோம். சிங்கப்பூரர்கள் மீண்டும் நமது பண்டிகைகளைக் கொண்டாடலாம்; குடும்பத்துடனும் நண்பர்களுடனும் உள்ளூரிலும் வெளியூரிலும் ஒன்றிணையலாம்.

கொஞ்சம் சந்தேகம்தான்! – சீனாவிலிருந்து வந்தால் பரிசோதிக்கப் படுவது உறுதி!

அண்மையில் நான் பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டேன். சாங்கி விமான நிலையம் உயிரோட்டத்துடன் பரபரப்பாக இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். சிங்கப்பூரர்கள் மீண்டும் வெளிநாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொள்கின்றனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் முழுமையாக நிரப்பப்படுகின்றன. பரிவுத் தூதர்களாகச் சேவையாற்றிய விமானச் சிப்பந்திகள், இப்போது மீண்டும் விமானத்தில் பணியாற்றுகின்றனர். நாம் உலகம் முழுவதிலிருந்தும் வருகையாளர்களை வரவேற்கும் வேளையில், நமது மீட்சி விமான நிலையத்தையும் விமான நிறுவனத்தையும் தாண்டி, ஹோட்டல்கள், கடைகள், உணவு, பானத் துறை, சேவைத்துறை ஆகியவற்றுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஷங்ரிலா உரையாடல், Bloomberg புதிய பொருளியல் கருத்தரங்கு உள்ளிட்ட முக்கிய அனைத்துலக நிகழ்வுகளை நாம் மீண்டும் ஏற்றுநடத்தத் தொடங்கினோம். சிங்கப்பூர் இரவு நேரக் கார்ப்பந்தயத்தின் பேரொலியையும் நாம் மீண்டும் கேட்டோம். துடிப்பான பந்தயங்களும், நேரடி நிகழ்ச்சிகளும் நமது நகரை உற்சாகத்தில் ஆழ்த்தின. சிங்கப்பூர் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதை வலியுறுத்தும் வலுவான அறிகுறியாக அது இருந்தது.

இருப்பினும், நான் அனைவரையும் வலுவாக ஊக்குவிக்கின்றேன். ஆக அண்மைய தகுதிவரம்புகளுக்கேற்ற தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளுங்கள்; இருவகைத் திறன் கொண்ட தடுப்பூசிகளைக் கொண்டு உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். நாங்கள் கோவிட்-19 நிலைமையை அணுக்கமாக கண்காணித்து வருகிறோம்; குறிப்பாக, ஆண்டிறுதிச் சுற்றுப் பயணங்களும், சீனாவில் அதிகரித்தும் வரும் கிருமித்தொற்றுச் சம்பவங்களும் எவ்வாறு நம்மைப் பாதிக்கலாம் என்று. இந்த அபாயங்கள் இருந்தபோதிலும் நமது நிலைமை தொடர்ந்து சீராக இருந்தால், கிருமித்தொற்றுக்குப் பிந்திய வழக்க நிலையை நிலைநாட்ட, எஞ்சியிருக்கும் சமுதாயக் கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்துவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளை நாம் எடுப்போம்.

துணிவுடன் வழக்குப் பதிவு செய்த வாரிசு! – சாதகமான தீர்ப்பைப் பெற்ற வாரிசு!

சிங்கப்பூரர்களின் நம்பிக்கையும், ஆதரவும் இன்றி, முன்னிலை ஊழியர்களின் துணிவார்ந்த முயற்சிகள் இன்றி, நாம் இந்நிலையை அடைந்திருக்க முடியாது. இந்தப் போராட்டத்தில் நேரடியாக உதவிய அனைவரையும் அங்கீகரிக்கும் நோக்கில், இப்போதுதான் நாம் கோவிட்-19 தேசிய விருதுப் பட்டியலை அறிவித்திருக்கிறோம், புதிதாக அறிவிக்கப்பட்ட கோவிட்-19 மீள்திறன் பதக்கம் உட்பட. நெருக்கடி மிகுந்த காலக்கட்டத்தில், அவர்கள் கடமைக்கும் அப்பால் செயல்பட்டனர்.

அவர்கள் நம்மைப் பாதுகாக்க முன்வந்தனர். பெரும்பாலான சமயங்களில், தங்களுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தையும் அறிந்து, பல தியாகங்களைச் செய்தனர். நிலைமை மேம்பட்டபோதும், நாம் அனைவரும் வழக்கநிலைக்குத் திரும்புவதற்காக, அவர்கள் பின்னணியிலிருந்து அயராது பாடுபட்டனர். சிங்கப்பூரின் மிகச் சிறந்த விழுமியங்களை அவர்கள் பிரதிபலிக்கின்றனர். அவர்களுக்கு நமது உளமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.

கோவிட்-19 கிருமிப்பரவலில் கிடைத்த அனுபவம், எதிர்கால நெருக்கடிகளுக்குத் தேவையான இன்றியமையாத படிப்பினைகளை நமக்குக் கற்றுத் தந்துள்ளது. வருங்காலக் கிருமிப்பரவல்களுக்கான நமது ஆயத்தநிலையை நாம் மேம்படுத்துவோம். அத்துடன், நாம் நமது சுகாதார, சமூகக் கட்டமைப்புகளையும் மேலும் விரிவாக வலுப்படுத்துவோம். சிங்கப்பூரர்கள் மேலும் நீண்டகாலம், மேலும் ஆரோக்கியமாக வாழும் பொருட்டு பொது மருந்தகங்களை ஈடுபடுத்த, ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ திட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- பயண கட்டணம் எவ்வளவு தெரியுமா?

கிருமிப்பரவல் காலக்கட்டத்தில் பொது மருந்தகங்களின் பங்கு அளப்பரியது. ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ திட்டம், நோய்த் தடுப்புச் சுகாதாரச் சேவைகளை வலியுறுத்தி, சிங்கப்பூரர்களுக்குப் பராமரிப்பு வழங்கப்படுவதை மேம்படுத்தும், குறிப்பாக, நமது மூத்தோருக்கு. அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.