“இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”- சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்!

This solidarity and perseverance in times of adversity defines our Singapore spirit - PM Lee
PHOTO: Ministry of Communications and Information

ஆங்கில புத்தாண்டையொட்டி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இன்று (31/12/2022) நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “நாம் பல வழிகளில், சிங்கப்பூரின் எதிர்காலத்தைத் திட்டமிட்டு, உருவாக்கி வருகிறோம். முக்கியத் திட்டப் பணிகள் நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றன. தேசிய தினக் கூட்ட உரையில், துவாஸ் துறைமுகம், சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையம் ஆகியவை பற்றிப் பேசினேன். அண்மையில், தாம்சன்- ஈஸ்ட் கோஸ்ட் இரயில் பாதையில் மேலும் 11 நிலையங்கள் திறக்கப்பட்டன. 2025- ஆம் ஆண்டில் அது முழுமையடையும்போது, அந்தப் பாதை, சுமார் ஒரு மில்லியன் பயணிகளுக்கு அன்றாடம் சேவையாற்றும். கிழக்கில் வசிப்போரை வடக்கு- தெற்கு பாதையுடன் அது இணைக்கும்.

“சாங்கி விமான நிலையம் உயிரோட்டத்துடன் பரபரப்பாக …”- புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் நினைவுக்கூர்ந்த சிங்கப்பூர் பிரதமர்!

வீடமைப்பைப் பொறுத்தமட்டில், கோவிட்-19 கிருமிப்பரவலால் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தாமதங்களை ஈடுசெய்ய நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். மேலும் அதிகமான வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளைக் கட்டவும், சிங்கப்பூரர்களுக்கு, குறிப்பாக இளம் குடும்பங்களுக்கு பொது வீடமைப்பு செலவு கட்டுப்படியாகவும், எளிதில் பெறக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த மாதம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் சுமார் 10,000 புதிய வீடுகளை விற்பனைக்கு விட்டது. இது, தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் அடுக்குமாடி வீடுகளுக்கான ஆகப்பெரிய ஒற்றை விற்பனை ஆகும். அடுத்த ஆண்டு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், மேலும் 23,000 புதிய வீடுகளை அறிமுகப்படுத்தும். வீடுகளுக்கான தேவையைப் பூர்த்திச் செய்யும் வகையில், இந்த வேகத்தைத் தக்கவைத்துக் கொள்வோம். அதோடு, 2021 முதல் 2025 வரை, நாங்கள் 100,000 புதிய தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் வீடுகளைக் கட்டும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறோம்.

அனைவரையும் மேலும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கவும், நாங்கள் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வீட்டிலும் வேலையிடத்திலும், ஆண்களும், பெண்களும், பாதுகாக்கப்படுவதையும் சமமாக நடத்தப்படுவதையும், உறுதி செய்வதற்கான கொள்கைகளை நாங்கள் அறிவித்தோம். இணையவழி இணைப்புத்தள ஊழியர்களுக்கு மத்திய சேமிப்பு நிதி பங்களிப்புகளையும் வேலையிடக் காய இழப்பீடுகளையும் உறுதிசெய்வதற்கு, நாம் தொழிற்சங்கங்களுடனும், முதலாளிகளுடனும் இணைந்து பணியாற்றி வருகிறோம். ‘துணைபுரியும் பெருந்திட்டம் 2030’ மூலம், உடற்குறையுள்ளோருக்கு வேலை கிடைக்கவும், அவர்கள் தன்மானத்துடன் வாழவும் நாங்கள் உதவி வருகிறோம்.

துணிவுடன் வழக்குப் பதிவு செய்த வாரிசு! – சாதகமான தீர்ப்பைப் பெற்ற வாரிசு!

அனைத்துலகச் சூழல் தொடர்ந்து பிரச்சினையாகவே உள்ளது. எந்தவொரு நல்ல முடிவும் தென்படாத வகையில், ரஷ்யா- உக்ரைன் பூசல் தொடர்கிறது. அமெரிக்க, சீனப் பதற்றநிலையும் தொடர்ந்து நீடிக்கக் கூடும். கோவிட்-19 கிருமிப் பரவலிலிருந்து சீனா எவ்வளவு விரைவாக மீண்டு வருகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேவேளையில் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் பொருளியல் மந்தநிலையை எதிர்கொள்ளக்கூடும். நமது பொருளாதாரமும் பாதிக்கப்படும். வர்த்தக, தொழில்துறை அமைச்சு, 2023- ஆம் ஆண்டில் வளர்ச்சி மேலும் மெதுவாக இருக்கும் என முன்னுரைத்துள்ளது. அது, 0.5 விழுக்காட்டிற்கும் 2.5 விழுக்காட்டிற்கும் இடைப்பட்டிருக்கும். எதிர்வரும் நிச்சயமற்ற சூழல்களை எதிர்கொள்ள, நாம் நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற சோதனைமிக்க நேரங்களில், நாம் ஒன்றுபட்ட மக்களாக இருக்க வேண்டும். துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் நான்காம் தலைமுறைக் குழுவினரும் ‘முன்னேறும் சிங்கப்பூர்’ கலந்துரையாடல்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நமது சமுதாய இணக்கத்தைப் புதுப்பிக்கவும், வருங்காலத்திற்கான புதிய பாதைகள வரையறுக்கவும், அவர்கள் சிங்கப்பூரர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர்.

சிங்கப்பூரர்கள் பலர் கலந்துரையாடல்களில் தங்களின் கருத்துகளையும், எண்ணங்களையும் துடிப்பாகப் பகிர்ந்துகொள்வதையும் தாண்டி, அரசாங்கத்துடன் தாங்கள் இணைந்து பங்களிக்கக் கூடிய அம்சங்களை அடையாளம் காணவும் முற்பட்டுள்ளனர். நமது சமுதாய இணக்கத்தைப் புதுப்பிக்கவும், வலுப்படுத்தவும், ஒருங்கிணைந்த இந்த உரிமத்துவமும், பொறுப்புணர்வும் இன்றியமையாதவை. கலந்துரையாடல்களின் பலன்களைக் காணவும், அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தக் கலந்துரையாடல்களை நிறைவுச் செய்யவும் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்.

கொஞ்சம் சந்தேகம்தான்! – சீனாவிலிருந்து வந்தால் பரிசோதிக்கப் படுவது உறுதி!

மிக மோசமான சூழ்நிலைகளிலும், நம்பிக்கை ஒளி வீசும். ஆனால், அது வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ளும் துணிவுடையோருக்கு மட்டுமே பொருந்தும். நாம் கிருமிப்பரவலைப் பாதுகாப்பாகக் கடந்து வந்து, மேலும் வலிமையுடன் மீண்டெழுந்துள்ளோம். நமது கோவிட்-19 அணுகுமுறை, உலக அரங்கில், நமது நன்மதிப்பையும் நற்பெயரையும் மெருகேற்றியுள்ளது. சிங்கப்பூர் மீது அதிக ஆர்வம் காட்டப்படுகின்றது. நிறைய தொழில்களும் தனிநபர்களும், சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் தொழில் தொடங்க விரும்புகின்றனர். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை அளிக்கும் முதலீடுகளையும், திறன்மிக்க பன்னாட்டவரையும், சிங்கப்பூருக்கு வரவேற்கும் அதே வேளையில், நாம் நமது திறன்களையும், ஆற்றல்களையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்; வட்டாரம், உலகம் எனப் புதிய இடங்களை நாடிச் செல்ல வேண்டும்; நமது கனவுகளை நனவாக்க வேண்டும். சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரர்கள் அனைவருக்கும், மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை நம்மால் உருவாக்க முடியும். அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. புத்தாண்டு வாழ்த்துச் செய்தி ஆங்கிலம், மலாய், சைனீஸ், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.