ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்ற சிங்கப்பூர் பேட்மிண்டன் வீரர்கள்!

Photo: CNA Official Twitter Page

 

சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் பேட்மிண்டன் வீரர் லோஹ் கீன் யூ (வயது 23) மற்றும் வீராங்கனை யியோ ஜியா மின் (வயது 22) ஆகிய இருவரும், அடுத்த மாதம் டோக்கியோவில் (Tokyo Olympic Games) நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளதாக சிங்கப்பூர் பேட்மிண்டன் சங்கம் (Singapore Badminton Association- ‘SBA’) நேற்று (07/06/2021) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

 

சிங்கப்பூர் பேட்மிண்டன் சங்கம் (SBA) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதிப் பெற்றவர்கள் பட்டியலை உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு (Badminton World Federation) வெளியிட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூரைச் சேர்ந்த வீரர்கள் லோஹ் கீன் யூ மற்றும் யியோ ஜியா மின் ஆகிய இருவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ளனர் என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

 

சிங்கப்பூரில் முன்னணி பேட்மிண்டன் வீரராக உள்ள லோஹ் கீன் யூ, உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள டோக்கியோ தரவரிசையின் சிறந்த ஆண்களில் 18 வது இடத்தில உள்ளார். அதேபோல், முன்னணி வீராங்கனையான யி ஜியா மின் சிறந்த பெண்களில் 17 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

சிங்கப்பூர் பேட்மிண்டன் சங்கம் சார்பில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்று விளையாடிய லோஹ் கீன் யூ வெள்ளிப்பதக்கம் வென்றார். அதேபோல், சிங்கப்பூர் பேட்மிண்டன் சங்கம் சார்பில் கடந்த 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற பேட்மிண்டன் போட்டிகளில் இருவரும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். இந்த நிலையில் இருவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

 

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இருவருக்கும் சிங்கப்பூர் கலாச்சார, சமூக மற்றும் இளைஞர் அமைச்சர் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் ஜூலை 23- ஆம் தேதி அன்று ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.