ஒலிம்பிக் போட்டியையொட்டி சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிடுகிறது சிங்கப்பூர் அஞ்சல் துறை!

Photo: Singapore Post

 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23- ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியையொட்டி, அதனை கொண்டாடும் விதமாக சிறப்பு அஞ்சல் தலைகளை ஜூலை 23- ஆம் தேதி அன்று வெளியிடுகிறது சிங்கப்பூர் அஞ்சல் துறை (Singapore Post).

அதன்படி, ஆறு அஞ்சல் தலைகள் (Six Stamps) வெளியிடப்படவுள்ளன. குறிப்பாக, சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள் பங்குபெறும் சில விளையாட்டுகளை மையமாகக் கொண்டு அஞ்சல் தலைகள் வெளியிடப்படவுள்ளன. அதில், நீச்சல் (Swimming), பேட்மிண்டன் (Badminton), துப்பாக்கிச் சுடுதல் (Shooting), டேபிள் டென்னிஸ் (Table Tennis), படகோட்டம் (Sailing), டைவிங் (Diving) ஆகியவை அடங்கும்.

இந்த அஞ்சல் தலைகள் வரும் ஜூலை 23- ஆம் தேதி முதல் அஞ்சல் நிலையங்கள், கடைகள், சிங்கப்பூர் அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். அஞ்சல் தலைகளின் விலை 30 சென்ட்ஸ் முதல் 1.40 சிங்கப்பூர் டாலர் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள்ளது.

ஜப்பானில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் (Summer Olympics) நடைபெறுவது இரண்டாவது முறையாகும். கடந்த 1964- ஆம் ஆண்டு ஜப்பானில் முதன் முறையாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 1972 மற்றும் 1998- ஆம் ஆண்டுகளில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (Winter Olympics) ஜப்பானில் இரண்டு முறை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் ஜூலை 23- ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன.

உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்களின் பார்வை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள டோக்கியோ பக்கம் திரும்பியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.