சிங்கப்பூரில் தீர்ந்து போன மருந்துகள் – இருமல்,காய்ச்சல் வந்தால் உட்கொள்ளும் மாத்திரைகள் பற்றாக்குறை!

omicron variant

சிங்கப்பூரின் மருந்தகங்களில் பெனடால் காப்&கோல்டு,டிகொல்ஜன் போன்ற மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளது.காய்ச்சல்,இருமல்,மூக்கடைப்பு,தும்மல் போன்றவற்றுக்கு பரிந்துரைக்கப்படும் இந்த மருந்துகள் தற்போது மருந்தகங்களில் போதிய அளவுக்கு இல்லை என்று கூறப்படுகிறது.

உருமாற்றம் அடைந்த ஓமிக்ரோன் திரிபுகள் தீவிரமாகப் பரவி அனைவரையும் பாதிக்கிறது.தொற்றால் பாதிப்பவர்களுக்கு இருமல்,தலைவலி போன்றவை ஏற்படுகின்றன.இவற்றிலிருந்து விடுபட அத்தகைய மாத்திரைகளை அதிகம் உட்கொள்கின்றனர்.

சிங்கப்பூரின் முக்கிய மருந்தகங்களான வாட்சன்ஸ்,கார்டியன் போன்ற மருந்தகங்களிலும் இந்த மாத்திரைகள் விறுவிறுவென விற்றுத் தீர்கின்றன.லசாடா,ஷாப்பீ போன்ற இணைய வர்த்தகத் தளங்களில் சில விற்பனையாளர்களிடம் இந்த இருவகை மாத்திரைகளும் இருப்பில் உள்ளன.இருப்பினும் அவை ஓரளவு மட்டுமே உள்ளன என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கார்டியன் நிறுவனத்தின் இணையதளத்தைக் காணும்போது,அந்த மருந்துகள் இருப்பில் இல்லை என்று தெரிகிறது.முன்புவிட அதிகமானவர்கள் இந்த மாத்திரையை வாங்குவதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.இரண்டு மருந்துகளும் ஆகஸ்ட் மாத முடிவில் போதிய அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த மாத்திரையைத் தயாரிக்கும் ‘ஹாலியோன்’ என்ற பிரிட்டனைத் தளமாகக்கொண்ட நிறுவனத்தின் ஆசிய பசிபிக் தலைமையகம் சிங்கப்பூரில் உள்ளது.இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே சிலவகை பெனடால் மாத்திரைகள் சில மருந்தகங்களில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.