ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்ற சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை!

Photo: Singapore Swimming Association Official Facebook Page

 

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் 32- வது ஒலிம்பிக் போட்டிகள் (Tokyo Olympics Games) நடைபெற உள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8- ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

 

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் தகுதிப் பெற்ற விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒலிம்பிக் போட்டிகளில் திறந்தவெளி நீச்சல் போட்டி (Open Water Swimmer) பிரிவில் பங்கேற்க சிங்கப்பூரைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை சாண்டல் லியூ (Swimmer Chantal Liew) தகுதிப் பெற்றுள்ளார். இவருக்கு வயது 22. இந்த பிரிவில் பங்கேற்க தகுதிப் பெற்ற முதல் சிங்கப்பூர் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

 

போர்ச்சுகல் நாட்டின் செட்டுபாலில் நடந்த ஃபைனா ஒலிம்பிக் மாரத்தான் நீச்சல் (FINA Olympic Marathon Swim Qualifier) தகுதிப் போட்டியில் 10 கி.மீ. பெண்கள் பிரிவில் பங்கேற்று (Women’s Marathon Swimming) 29- வது இடத்தைப் பிடித்தார் சாண்டல் லியூ. அதுபோல், கடந்த 2017- ஆம் ஆண்டு மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற தென்கிழக்காசியப் போட்டிகளில் (SEA Games), திறந்தவெளி நீச்சல் போட்டியில் பங்கேற்று சாண்டல் லியூ வெள்ளி பதக்கம் வென்றார். இந்த பதக்கத்தை வென்ற முதல் சிங்கப்பூர் பெண் என்ற பெருமை லியூவைச் சேரும்.

 

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்ற சாண்டல் லியூக்கு சிங்கப்பூரின் கலாச்சாரம், சமூகம், இளைஞர்கள் துறை அமைச்சர் டோங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக, கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண்டிற்கு பிறகு வரும் ஜூலை மாதம் 23- ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.