பிரபல நட்சத்திர ஹோட்டலில் அறை முன்பதிவுக்கு தடை!

Photo: Orchard Hotels Instagram

 

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததை அடுத்து, அமலில் உள்ள கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்தி வருகிறது சிங்கப்பூர் அரசு. அந்த வகையில் ஜூன் 14- ஆம் தேதி முதல் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுஇடங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் ஐந்து பேர் வரை குழுவாக பங்கேற்க அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளது.

 

இந்த நிலையில் நடப்பாண்டு பிப்ரவரி 6- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலான ஆர்ச்சர்ட் ஹோட்டலில் (Orchard Hotel Singapore) ஒரே அறையில் 11 பேர் சேர்ந்து பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். இதனை சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின் (Singapore Tourism Board- ‘STB’s Enforcement Officers) அமலாக்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு 1,000 சிங்கப்பூர் டாலரை அபராதமாக அதிகாரிகள் விதித்துள்ளனர். அரசின் விதிமுறைகளை மீறியதாக ஜூன் 25- ஆம் தேதி முதல் ஜூலை 24- ஆம் தேதி வரை 30 நாட்களுக்கு ஹோட்டலில் அறைகளை முன்பதிவு செய்வதற்கு தடை விதித்து ஹோட்டல் நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இருப்பினும், ஏற்கனவே அறைகளை முன்பதிவு செய்திருந்தால், அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அறையில் பிறந்தநாளைக் கொண்டாடிய 11 பேரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன. விசாரணைக்கு பிறகு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

 

இதனிடையே, ஜூன் 14- ஆம் தேதி முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டதில் இருந்து தேசிய பூங்கா வாரியத்தால் (National Parks Board- ‘NParks’) நிர்வகிக்கப்படும் பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளில் முகக்கவசம் அணியாதது, அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிகளவில் குழுவாகக் கூடியது உள்ளிட்ட அரசின் விதிமுறைகளை மீறியதாக 117 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 

எடுத்துக்காட்டாக, சாங்கி கடற்கரை பூங்கா (Changi Beach Park) மற்றும் கிழக்கு கடற்கரை பூங்காவில் (East Coast Park) முறையே 17 பேர் மற்றும் 13 பேர் அடங்கிய இரு குழுக்களை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்தனர்.