இந்தியாவிற்கு வெண்டிலேட்டர்களை வழங்கிய சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம்!

 

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கிப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தற்போது பாதிப்பும், உயிரிழப்பும் குறைந்து வருகிறது.

 

இதனிடையே, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை விட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகம் பேருக்கு ஆக்சிஜன் தேவைப்பட்ட நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தியாவிற்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை விமானம் மூலம் அனுப்பி வருகின்றன. மேலும், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகளை தன்னார்வ அமைப்புகள், தொழில் அதிபர்கள் தொடர்ச்சியாக இந்தியாவிற்கு வழங்கி வருகின்றன.

 

அந்த வகையில் இந்தியாவிற்கு உதவுவதற்காக சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் (Singapore Red Cross) சுமார் 3,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 1,000 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 205 வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவையை கொள்முதல் செய்தது. இதில் முதற்கட்டமாக ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர்களை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் (Indian Red Cross) வழங்கியது. அதனை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினர் தமிழகம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஆறு மருத்துவமனைகளுக்கு வழங்கினர். அதேபோல், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.

 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினர் ரூபாய் 2 கோடி மதிப்பிலான வெண்டிலேட்டர்களை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., தமிழக சுகாதார திட்ட இயக்குநர் உமா இ.ஆ.ப., இந்திய செஞ்சிலுவை சங்கத் தலைவர் டாக்டர் ஹரிஸ்மேத்தா மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.