பங்குனி உத்திரத் திருவிழா- புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு!

Photo: Holy Tree Sri Balasubramaniar Temple Offical Facebook Page

இன்று (18/03/2022) பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, சிங்கப்பூரில் யீஷுனில் (Yishun Industrial Park) உள்ள புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் (Holy Tree Sri Balasubramaniar Temple) சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் நேற்று (17/03/2022) இரவு முதல் பால் குடம் சுமந்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். குறிப்பாக, கோயில் நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்ட பால் குடம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் 10 சிறார்களிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட இளைஞனுக்கு சீர்திருத்த பயிற்சி.!

பால் குடத்திற்கு முன்பதிவு செய்து கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டும் பால் குடம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கும் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதேபோல், கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக, இவ்வாண்டு பால் குடம் ஊர்வலத்திற்கு மட்டும் கோயில் நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. காவடி ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனினும், குழந்தைகளுக்கான முடிக் காணிக்கை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

‘சிங்கப்பூர் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டிகளைக் காண அதிகமான ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர்’- சிங்கப்பூர் கால்பந்து சங்கம் அறிவிப்பு!

அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் விரிவான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. அதன்படி, பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரைவாகவும், பாதுகாப்பாகவும் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தனித்தனியே பிரத்யேக பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் சுமார் 10,000 பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இரவு முதல் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்து சுவாமியை வழிபட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.

புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு வருகை தந்த சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் சண்முகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.