பயண விவரம் பற்றி பொய்யான தகவல் அளித்தவருக்கு மூன்று வாரச் சிறை!

New Upper Changi Road motorcyclist dies
Photo: SPF

 

கட்டுமான நிறுவனத்தில் நில அளவராகப் பணியாற்றி வரும் விஜயகுமார் இசட் ஜோசப் (வயது 58) (Vijeyakumar Z Joseph) என்பவர், பணி நிமித்தமாகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13- ஆம் தேதி முதல் 22- ஆம் தேதி வரை இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவிற்கு சென்று, சிங்கப்பூருக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இந்த நிலையில், சிங்கப்பூர் திரும்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் சேஃப் டிராவல் (Safe Travel) இணையதளத்தில் சிங்பாஸ் (Singpass) விவரத்தைப் பயன்படுத்தி, வேறு இடத்தில தனிமையில் இருக்க விரும்பவில்லை (Stay Home Notice- ‘SHN’) என்று குறிப்பிட்டார்.

 

இந்த இணையதளத்தில் ஃபிஜி, பின்லாந்து, இலங்கை, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட ஏழு நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் தனிமைக் காலத்தைக் கழிக்க விரும்பவில்லை என்று குறிப்பிட அனுமதிக்கப்பட்டிருந்தது. அதனால் மேலே குறிப்பிட்ட ஏழு நாடுகளுக்கும் சென்று வந்ததாக விஜயகுமார் தனது பயண விவரத்தில் தெரிவித்தார்.

 

அதைத் தொடர்ந்து, அவர் சிங்கப்பூர் வந்தபோது குடிநுழைவுத்துறை அதிகாரிகளிடம் பொய் தகவல் அளித்து, உறுதிமொழி விண்ணப்பத்தில் கையெழுத்திட்டார்.

 

இருப்பினும், விஜயகுமார் மீது குடிநுழைவுத்துறை அதிகாரிகள் அவர் எந்தெந்த நாட்டிற்கு சென்று வந்தார் என்பது குறித்தும், அவர் அளித்த பயணம் விவரமும் சரியாக உள்ளதா என விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் விஜயகுமார், அந்த ஏழு நாட்டிற்கும் செல்லவில்லை என்பதும், சிங்கப்பூர் வந்த உடனே தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் இடத்திற்கு பதில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள விரும்பியதால் அதிகாரிகளிடம் பொய்யான தகவல் அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் சிங்கப்பூர் காவல்துறையினர். இதனை விசாரித்த நீதிபதி, தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் விஜயகுமாருக்கு மூன்று வார சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.