பயணிகள் அவதி: திருச்சி- சிங்கப்பூர் இடையே விமான சேவைகள் அதிகரிக்கப்படுமா?

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு சேவையாக சென்னைக்கு நான்கு விமான சேவைகளும், பெங்களூருக்கு மூன்று விமான சேவைகளும், ஹைதராபாத் வழியாக டெல்லிக்கு ஒரு விமான சேவை என தினசரி எட்டு விமானங்களும், வெளிநாட்டு சேவையாக சிங்கப்பூருக்கு நான்கு விமான சேவைகளும், மலேசியாவுக்கு மூன்று விமான சேவைகளும், கொழும்பு, ஷார்ஜா, துபாய் ஆகிய நாடுகளுக்கு தலா ஒரு விமான சேவையும் என 10 விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

சிங்கப்பூரில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்…. ஏராளமானோர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி!

இது தவிர, குவைத், அபுதாபி, மஸ்கட், தோஹா ஆகிய நாடுகளுக்கு வாராந்திர விமான சேவையும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கையாளப்படும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி- சிங்கப்பூர் இடையேயும், சிங்கப்பூர்- திருச்சி இடையேயும் கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 2022- 2023 ஆம் நிதியாண்டில் திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர்.

அதேபோல், நடப்பாண்டின் ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்த வழித்தடத்தில 41,660 பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த மே மாதம் 47,607 பயணிகள் பயணம் செய்துள்ளனர். திருச்சி மற்றும் சிங்கப்பூர் வழித்தடத்தில் கடந்த 2007- ஆம் ஆண்டு நேரடி விமான சேவைத் தொடங்கப்பட்ட நிலையில், அந்த வழித்தடத்தில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை தற்போது உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்த நிலையில், திருச்சி, சிங்கப்பூர் இடையே விமான சேவையை வழங்கி வரும், ஸ்கூட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் வரும் செப்டம்பர் மாதம் வரை அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

போக்குவரத்து போலீசாரின் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து: ஆடவர் மரணம்

இதனால் அவசர தேவைக்கு கூட சொந்த ஊர் திரும்ப முடியாமல் பயணிகள் அவதியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருச்சி, சிங்கப்பூர் இடையே கூடுதல் விமானங்களை இயக்க, விமான நிறுவனங்களுக்கும், திருச்சி விமான நிலையத்தின் நிர்வாகத்திற்கும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து விளக்கமளித்துள்ள திருச்சி விமான நிலையத்தின் இயக்குனர் சுப்பிரமணியன், “திருச்சி- சிங்கப்பூர் இடையே கூடுதல் விமான சேவையை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.