நிறுவனத்தில் ஊழியர்கள் வேலை செய்வதாகப் போலிக்கணக்குக் காட்டிய முதலாளிகள்! – அபராதம் விதித்த MOM!

சிங்கப்பூரர்கள் மற்றும் PR-கள் இரண்டில் 3 பேருக்கு மாத சம்பளம் S$5,000க்கு மேல்... நல்ல சம்பளம் கொண்ட 900 வேலைகள்
(Photo: TODAY)

சிங்கப்பூரில் தனது நிறுவனத்தில் வேலை செய்யாதவர்களைத் தங்கள் ஊழியர்கள் எனப் போலியாகக் கணக்குக் காட்டிய குற்றத்திற்காக 2015ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் சுமார் 11 நிறுவனங்களின் முதலாளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்த தகவல் நாடாளுமன்றத்தில் இன்று வெளியிடப்பட்டது.அதே ஆறாண்டுகளில் மனிதவள அமைச்சகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 600க்கு மேற்பட்ட புகார்கள் வந்தன.நிறுவனத்தில் வேலைசெய்யாத உள்நாட்டினருக்குச் சேமநிதிச் சந்தா செலுத்துவதன் மூலம் நிறுவனங்கள் அவற்றின் வெளிநாட்டு ஊழியர் வரம்பை உயர்த்துவது குறித்த புகார்கள் அதிகரித்தன.

பெரும்பாலான நிறுவனங்கள் மீது புகார்கள் வந்த நிலையில் மிகவும் குறைவான நிறுவனங்களுக்கே அபராதம் விதிக்கப்பட்டது.எனவே, அல்ஜூனிட் குழுத்தொகுதி உறுப்பினர் ஜெரால்ட் கியாம் புகார்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளிக்கு ஏதேனும் காரணம் உள்ளதா என கேள்வியெழுப்பினார்.

மனிதவளத் துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் இதற்குப் பதிலளித்தார்.புகாரளித்தவர்கள் நிறுவனங்கள் பற்றிய முழு விவரங்களையும் ஆதாரங்களையும் சமர்ப்பிக்காமல் இருப்பதால் கூட அபராதம் விதிக்கப்படாமல் இருக்கும்.

அமைச்சகம் புலனாய்வு செய்த பிறகே விவரங்கள் தெரிய வரும் என்றார்.அதேவேளை,நிறுவனங்களுக்கும் நியாயமாக இருக்கவேண்டும் என்பதால் தீவிர விசாரணைக்குப் பின்னர் ஆதாரம் இருந்தால் மட்டுமே அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் கூறினார்.தொழில்நுட்பத்தின் உதவியுடன் அமைச்சகம் தகவல்களை விரைவாகத் திரட்டி வருவதாகவும் கூறினார்.