அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து- 90 பேர் பத்திரமாக வெளியேற்றம்!

Photo: SCDF Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள பிபிட் சாலையில் அமைந்துள்ள பிளாக் 94 என்ற (Fire @ Blk 94 Pipit Road)
அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (10/11/2021) இரவு 08.05 PM மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினரின் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தீயணைப்புத்துறையினர் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர். அதேபோல், அப்பகுதியைச் சேர்ந்த காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சிங்கப்பூரில் கொரோனாவால் மேலும் 17 பேர் உயிரிழப்பு!

அதைத் தொடர்ந்து, அடுக்குமாடி குடியிருப்பில் 9- வது மாடியில் இருந்து புகை வருவதை அறிந்த தீயணைப்பு வீரர்கள், சுவாசக் கருவி செட்டை அணிந்துக் கொண்டு, குடியிருப்புக்குள் நுழைந்தனர். மேலும், 9-வது மாடிக்கு சென்ற வீரர்கள், அங்கு நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவர் அசிஸ்டெட் சைக்கிளில் (Power-Assisted Bicycle- ‘PAB’) தீ கொளுந்துவிட்டு எரிந்ததைக் கண்டறிந்தனர்.

பின்னர், ‘Air Foam BackPack’ மற்றும் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதும் அணைத்தனர். தீ விபத்தின் விளைவாக, தாழ்வாரம் புகை மற்றும் வெப்பத்தால் சேதமடைந்தது. மேலும், பவர் அசிஸ்டெட் சைக்கிள் முழுவதும் எரிந்து தீக்கரையானது.

ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட பயணத் தடை பட்டியலிலிருந்து சிங்கப்பூர் நீக்கம்!

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சுமார் 90 பேரை காவல்துறையினர் மற்றும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் பத்திரமாக வெளியேற்றினர்.

இந்த விபத்தில் இரண்டு நபர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் துணை மருத்துவர் மதிப்பீடு செய்தார். மேலும், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். இருப்பினும், அவர்களை மருத்துவமனையில் கொண்டு செல்ல அவசியமில்லை என்று மருத்துவர் தெரிவித்தார்.

தீபாவளி திருநாளில் நடைபெற்ற நெகிழ்வான சம்பவம்!

தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், Power-Assisted Bicycle- ‘PAB’- ல் ஏற்பட்ட மின்சார கசிவே தீ விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பாக, அக்கம்பக்கத்தினர் வாளியில் தண்ணீரை நிரப்பி தீயை அணைக்க முயன்றனர் என்று குறிப்பிட்டுள்ள தீயணைப்புத்துறை அவர்களை பாராட்டியுள்ளது.