சவாலான காலங்களில் தொண்டாற்றியது குறித்துப் பாராட்டிய பிரதமர் லீ – ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்

(Photo: MCI)

சிங்கப்பூர் எதிர்நோக்கும் மிரட்டல்கள்,சவால்களை சிறந்த முறையில் எதிர்கொண்டு மக்களுக்குச் சிறந்த தொண்டாற்றவும் எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் மக்கள்-அரசாங்கத்திற்கு இடையேயான நம்பிக்கை,அனுபவமுள்ள எம்பிக்கள்,கட்சிப் புதுப்பிப்பு ஆகியவை அவசியம் என்று பிரதமர் லீ வலியுறுத்தியுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஓய்வு பெற்ற 20 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விருந்தில் பிரதமர் கலந்து கொண்டு உரையாடினார்.பெருந்தொற்றைச் சமாளிப்பதில் நீண்ட முன்னேற்றம் கண்டிருப்பதற்கு அரசுக்கும் மக்களுக்கும் இடையே நிலவும் வலுவான நம்பிக்கையே முக்கியக் காரணம் என்று கூறினார்.

நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய தொண்டுகளையும் அர்ப்பணிப்புச் சேவைகளையும் பிரதமர் பெரிதும் பாராட்டினார்.ஓய்வு பெற்ற மசெக உறுப்பினர்களைப் போலவே கட்சிக்குப் புதிய தலைமுறையினர் தொடர்ந்து தேவை என்று கூறிய பிரதமர் ,நேர்மை,கட்டுப்பாடு,ஆற்றல்,பல்துறை அனுபவம் கொண்டவர்கள் சேவை செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கடுமையான சவால் மிகுந்த காலங்களில் கட்சியை எப்போதும் ஆற்றல் மிக்கதாக புதுப்பித்து சிங்கப்பூரர்களுடன் அணுக்கத் தொடர்புள்ளதாக வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.நிதி,போக்குவரத்து மூத்த துணை அமைச்சரும் விருந்து ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான சீ ஹெங் டாட் ,ஓய்வு பெற்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.