காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்!

events assemblies applications rejected spf
File Photo : Singapore Police

 

சிங்கப்பூரில் உள்ள காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகைச் செய்யும் காவல்துறை படை சட்டத்தில் (Police Force Act) திருத்தம் செய்யப்பட்ட மசோதாவை உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs- ‘MHA’) நேற்று (05/07/2021) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

 

இந்த மசோதாவின் படி, காவல்துறையினர் வீடுகள் மற்றும் வளாகங்களுக்கு கட்டாயமாக நுழைதல், காயங்கள், மரணம் ஆகியவற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றுதல் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நெருக்கடி காலங்களில் எந்தவொரு பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளும் தங்களது பதவியை காவல்துறை ஆணையரின் ஒப்புதலுடன் மட்டுமே ராஜினாமா செய்ய முடியும். நெருக்கடி காலங்கள் என்பது அதிபரால் அறிவிக்கப்பட்ட அவசர கால நிலை (அல்லது) பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் கீழ் செயல்படுத்தும் உத்தரவு என வரையறுக்கப்படுகிறது.

இந்த மசோதா குறித்து உள்துறை அமைச்சகம் கூறுகையில், “சாலைத் தடைகளை அமைத்தல், கூட்டத்தைக் கலைத்தல், குற்றங்கள் நிகழாமல் தடுப்பது போன்ற கடமைகளைச் செய்ய காவல்துறையினருக்கு உதவும். அதிகாரிகள் ஒருமைப்பாடு மற்றும் நிபுணத்துவத்தின் மிக உயர்ந்தத் தரங்களை நிலை நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குற்றங்களைச் செய்யும் அதிகாரிகளுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தங்கள் சட்டப்பூர்வமான கடமைகளை உறுதியுடன் நிறைவேற்ற முடியும் என்பதை உறுதிப்படுத்த, திருத்தங்கள் நல்ல நம்பிக்கையுடனும், நியாயமான கவனிப்புடனும் செய்யப்படும். இதே போன்ற விதிகள் மற்ற சட்டங்களின் கீழ உள்ளன என்றாலும், காவல்துறை படை சட்டத்தின் கீழ் தெளிவாகக் குறிப்பிடப்படும். அதிகாரிகள் தங்கள் சட்டப்பூர்வமான கடமைகளை அதிக உத்தரவாதத்துடன் செய்ய முடியும்” எனத் தெரிவித்துள்ளது.

காவல்துறை படை சட்டத் திருத்த மசோதாவின் Police Force (Amendment) Bill இரண்டாவது வாசிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.