சிங்கப்பூர் கோவில், பள்ளிவாசல்களில் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பு வழிபாடு!

Pondicherry CM Narayanasamy visit Singapore

பாண்டிச்சேரி முதலமைச்சர் திரு.நாராயணசாமி அரசுமுறைப்பயணமாக 6ந்தேதி மாலை சிங்கப்பூர் வந்தடைந்தார்.

கிராண்ட் கார்ப்தோர்ன் வாட்டர் ஃபிரண்ட் ஹோட்டலில் முதலமைச்சருக்கு மூத்த சமூக அடித்தள தலைவரும், முஸ்லிம் லீக் சிங்கப்பூர் சமூக நல்லிணக்க சேவை அமைப்பின் தலைவருமான புதிய நிலா மு. ஜஹாங்கீர் பொன்னாடை போர்த்தியும் மலர்மாலை அணிவித்தும் வரவேற்றார் . புதுவை தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் மாண்புமிகு எம்.ஓ.ஹெச்.எஃப். ஷாஜஹான், சிங்கப்பூருக்கான இந்திய தூதர் டாக்டர் ஜாவித் அஷ்ரஃப், புதுவை அரசு உயர் அதிகாரி ஆகியோருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

இந்திய முஸ்லிம் பேரவை தலைவரும் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் திரு. முஹம்மது கெளஸ், சமூக தலைவர்கள் திரு. ஃபரிஹுல்லாஹ், முஹம்மது பிலால், தக்கலை மீரான், முஹைதீன் நிஸார் , ஹாரிஸ், முஹம்மது ஃபாரூக் மற்றும் பிரமுகர்கள் பலர் சால்வை போர்த்தி முகம் மலர வரவேற்றனர்.

தொடர்ந்து மூன்று நாட்கள் சிங்கப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் தலைமையிலான குழு 7ந்தேதி கிராண்ட் கார்ப்தோர்ன் வாட்டர் ஃபிரண்ட் ஹோட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் தொழிலதிபர்கள் பலரை சந்தித்தார்.

சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் புதுச்சேரி மாநிலத்தில் எந்தெந்த துறைகளில் முதலீடு செய்யலாம் என்னென்ன தொழில் வாய்ப்புகள் அங்குள்ளது, என்ற விபரங்களை எடுத்துரைத்து அழைப்பு விடுத்தார்.

திரு. நாராயணசாமி அவர்கள் அப்துல் கபூர் பள்ளிவாசல், ஶ்ரீ வடபத்திரக்காளியம்மன் கோவில் ஆகிய இடங்களுக்கு சிறப்பு விஜயம் செய்தார்.