பிளவுப்படுமா சிங்கப்பூர்? – “முன்னேறும் சிங்கப்பூர் ” திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

lawrence wong says about foreign workers
PHOTO: MINISTRY OF COMMUNICATIONS AND INFORMATION

சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்குக் கருத்துகளைப் பகிர முன்வருமாறு துணைப் பிரதமர் லாரன்ஸ் ஒங் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுத்தார்.கோவிட்-1 9 நோய்த் தொற்றுக்கு பின்னர் நாடு மீட்சியடைய வேண்டிய முக்கிய நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.

“முன்னேறும் சிங்கப்பூர்” எதிர்காலத் திட்டத்தின் ஓர் அங்கமாக சிங்கப்பூர் மக்களின் பங்களிப்புகள் அடுத்த ஆண்டு நடுவில் வெளியிடப்படும்.நாட்டின் இலக்குகளை அடைவதற்கு சமுதாயத்தின் வெவ்வேறு அங்கத்தினரும் பங்களிக்கலாம் என்பதும் இந்த எதிர்காலத் திட்டத்தில் குறிப்பிடப்படும்.

ஒன் மெரினா போலிவெர்டில் உள்ள தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மையத்தின் (NTUC) கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் துணைப் பிரதமர் உரையாற்றினார்.ஓராண்டு நடைபெறும் ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்தை துணைப் பிரதமர் வழிநடத்துவார்.சுகாதாரம்,வேலைவாய்ப்பு,வீடுகள் உட்பட ஆறு அம்சங்களுக்கும் நான்காம் தலைமுறை தலைவர்கள் பங்கேற்பார்கள்.

இம்மாதம் 13-ஆம் தேதி துணைப்பிரதமராக பதவியேற்ற வோங்,சிங்கப்பூரர்கள் எதிர்நோக்கும் போராட்டங்களைப் பற்றி முன்பை விட தற்போது நன்கு அறிவதாகக் கூறினார்.மேலும் சமூகப் பிணைப்பை உறுதிப்படுத்தாவிட்டால் சிங்கப்பூர் நிச்சயமாக பிளவுபட்டு விடும் என்று எச்சரித்தார்.

சமூகப் பிணைப்பு முக்கிய அம்சங்களில் ஒன்றாக மாறக்கூடும் என்று விளக்கினார்.நாட்டின் பொருளியல் அனைவருக்கும் பயனளிக்கிறதா என்பது முதல் அம்சம்.தகுதிக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கை இரண்டாவது அம்சமாகும்.சமூக ஆதரவு,ஒற்றுமை ஆகிய இரண்டு அம்சங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.சிங்கப்பூரின் அடிப்படையான பல்லினக் கொள்கை உள்பட சில அம்சங்கள் மாறாது,மாறக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரின் பொருளியல் இடையூறுகள் ,ஆதரவுத் திட்டங்கள் போதுமானதா என்ற கேள்வியை எழுப்புவதாக கூறினார்.மாறிவரும் சமூகப் பிணைப்பு எவ்வாறு சிங்கப்பூரர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதையும்,எதிர்காலத் தலைமுறையினருக்கு என்ன வழங்குகிறோம் என்பதையும் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார்.