சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட மலைப்பாம்புகள் – மலேசிய லாரி ஓட்டுனரிடம் விசாரணை

python snakes are seized at malaysia toll plaza singapore tuas

மலேசியாவிலிருந்து லாரியில் சிங்கப்பூருக்கு உயிருடன் 2 மலைப்பாம்புகள் பெட்டியில் வைத்து கடத்தப்பட்டன.கடத்தப்பட்ட உயிருள்ள 2 மலைப்பாம்புகளும் வியாழக்கிழமை அன்று Tuas சோதனைச்சாவடியில் கைப்பற்றப்பட்டன. சிமெண்ட் ஏற்றிச்சென்ற ஒரு லாரியின் கேபினில் ஒரு மெத்து பெட்டியில் மலைப்பாம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடிவரவு மற்றும் சோதனைச்சாவடி ஆணையம், தேசிய பூங்கா வாரியம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்து சனிக்கிழமை அன்று கூட்டறிக்கை வெளியிட்டனர். மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியில் மறைத்து வைத்து கடத்திச் சென்ற உயிருள்ள 2 மலைப்பாம்புகளை கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

லாரியை ஓட்டிச் சென்ற மலேசிய ஓட்டுனரிடம் ஆரம்பத்தில் விசாரணை செய்தபோது பல துளைகள் கொண்ட பெட்டியில் உணவு இருப்பதாக பொய் கூறி இருக்கிறார். ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்ததில் பெட்டியில் மலைப்பாம்புகள் இருப்பதை ஒப்புக்கொண்டார்.அரசாங்கத்தின் இறக்குமதி அனுமதி இல்லாத ஓட்டுநர் விசாரணைக்காக NParks-க்கு பரிந்துரைக்கப்பட்டார்.

கடத்தப்பட்ட மலைப்பாம்புகள் அழிந்து வரும் காட்டு விலங்குகள் மற்றும் இயற்கை தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் கீழ் பாதுகாக்கப்பட்ட இனமாகும். கடத்தப்பட்ட மலைப்பாம்புகளின் நீளங்கள் முறையே 4.8 மீ மற்றும் 3.8மீ ஆகும்.

வன விலங்குகளின் பல்லுயிர் பெருக்கத்தை அச்சுறுத்துதல் மற்றும் சட்டவிரோதமாக வனவிலங்குகளை வர்த்தகம் செய்தல் போன்றவை சுற்றுச்சூழல் அமைப்புகளை சீர்குலைக்கிறது. பாதுகாக்கப்பட்டுவரும் இனத்தை அரசாங்க அனுமதி இன்றி இறக்குமதி செய்வது சட்டப்படி குற்றமாகும். இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் $50,000 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும்.