தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்ட மூவர்! – சிங்கப்பூரிலிருந்து மெல்பர்னுக்கு திரும்பிய பயணிகளுக்கு எச்சரிக்கை

FILE PHOTO

சிங்கப்பூரிலிருந்து மெல்போர்ன் நகருக்குத் திரும்பிய மூவருக்குத் தட்டம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.மூன்று நாட்களுக்கு முன்பு நவம்பர் 14 அன்று Qantas விமானம் QF36இல் பயணம் செய்ததாக விக்டோரியா மாநிலத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.அவர்களில் இருவருக்குத் தட்டம்மை இருந்தது பயணத்தின்போது தெரிய வந்ததாகவும் உடனடியாக மருத்துவரை அணுகியதாகவும் அமைச்சகம் கூறியது.

தட்டம்மை நோய் பரவக்கூடிய தளங்களாக பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்த விமானமும் மெல்பர்ன் விமான நிலையமும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நவம்பர் 15ஆம் தேதி காலை 6:10 மணி முதல் 8:40 மணி வரை மெல்பர்ன் விமான நிலையத்தின் அனைத்துலக வருகைப் பகுதியில் இருந்தவர்கள்,QF36 விமானத்தில் பயணம் செய்தவர்கள் ஆகியோர் இரண்டு வாரங்களுக்கு தங்கள் உடல்நலத்தைக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

நெருங்கிய தொடர்பில் தட்டம்மை எளிதில் பரவக்கூடியது.தட்டம்மைக்கு எதிராக தடுப்பூசி போடாதவர்களிடையே தீவிரமாகப் பரவும் என்று தெரிவிக்கப்பட்டது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவான பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் தட்டம்மை பரவும் அபாயம் அதிகம் என்று கூறப்படுகிறது.இந்தாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை விக்டோரியாவில் 5 தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன.