மலேரியா நோயைக் கண்டறிய உதவும் பரிசோதனை கருவியைக் கண்டுபிடித்த ‘நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் குழு’!

Photo: Nanyang Technological University Official Facebook Page

 

 

சிங்கப்பூரில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்று நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Nanyang Technological University- ‘NTU’). இந்த பல்கலைக்கழகத்தில் உள்நாட்டு மாணவர்கள் மட்டுமல்லாது, மலேசியா, இந்தோனேசியா, இந்தியா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றன.

 

இந்நிலையில், இந்த பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் குழு மலேரியா நோயைக் கண்டறிய உதவும் பரிசோதனை கருவியை (Rapid Malaria Test Kit) உருவாக்கியுள்ளனர். காய்ச்சல் ஏற்படும் நபர்களுக்கு சாதாரண காய்ச்சலா அல்லது மலேரியா காய்ச்சலா என்பது போன்ற சந்தேகங்கள் ஏற்படும் போது இந்த கருவியின் மூலம் சுமார் 30 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துக் கொள்ளலாம். இந்த பரிசோதனை கருவியைப் பயன்படுத்துவது எளிதானது மற்றும் மலேரியா நோயை அதன் ஆரம்ப கட்டங்களில் கண்டறியும் திறன் கொண்டவை என்பதால், மலேரியா நோயைக் கண்டறிய இந்த கருவி மிக உதவுகிறது. இந்த பரிசோதனை கருவி துல்லியமான முடிவுகளைத் தருகிறது.

 

ஆய்வுக்கு தலைமைத் தாங்கிய நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வேதியியல் மற்றும் உயிரியல் பொறியியல் துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் லியு குவான் (Associate Professor Liu Quan, from NTU’s School of Chemical and Biomedical Engineering) கூறியதாவது, “தற்போதைய தீர்வுகளுடன் ஒப்பிடும் போது, இரத்தத்தில் ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது கூட, நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கிய சோதனைக் கருவியின் மூலம் மலேரியா நோய்த்தொற்றுகளைக் கண்டறிய முடியும். குறிப்பாக நோயின் ஆரம்ப கட்டங்களில் ஒவ்வொரு சோதனையிலும் ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கையை இதன் மூலம் கணக்கிட முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

மலேரியா நோயானது கொசுக்களால் பரவும் நோயாகும். உலக சுகாதார அமைப்பின் (World Health Organisation- ‘WHO’) ஆய்வின் படி, கடந்த 2019- ஆம் ஆண்டு 229 மில்லியன் மக்கள் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக 87 வளரும் நாடுகளில் மலேரியாவால் பாதிக்கப்பட்டு 4,09,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இதனால் வளரும் நாடுகளில் மலேரியா நோயை எதிர்த்துப் போராட இந்த பரிசோதனை கருவி முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.