புற்றுநோயால் அவதியுறும் சிறாருக்கு பைக்கில் சென்று நிதி திரட்டிய துணைப் பிரதமர் – மலரும் நினைவுகள் திரும்பியதாக திரு.வோங் பேச்சு

royal enfield bike convoy cancer trust fund dpm wong
சிங்கப்பூரின் நிதி அமைச்சரும் மற்றும் துணைப் பிரதமருமான லாரன்ஸ் வோங் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தில் பங்கெடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு ஆதரவளிக்கும் அறக்கட்டளைக்கு நிதி திரட்டினார்.Royal Enfield Classic 500 ரக மோட்டார் சைக்கிளை திரு.வோங் ஓட்டினார்.’Riders Eight Singapore’ அமைப்பு நிதி திரட்டலுக்கு ஏற்பாடு செய்தது.

 

ஆகஸ்ட் 14 பிற்பகல் 1 மணியளவில் தெம்பனீஸ் வாகன நிறுத்துமிடத்திலிருந்து பைக்குகள் ஒன்றாக புறப்பட்டுச் சென்றன.இதுவரை $30,000 வரை திரட்டப்பட்டுள்ளதாக அமைப்பின் தலைவர் சூரிய குமார் தெரிவித்தார்.ஊர்வலம் லோயாங் துவா பெக் கோங் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த போது திரு.வோங் ஊர்வலத்தில் சேர்ந்து கொண்டார்.கோயிலைச் சென்றடைந்ததும் அங்கு கூடியிருந்த மக்களிடம் அவர் பேசினார்.

 

மோட்டார் சைக்கிள் ஓட்டி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதாகவும் மீண்டும் அதை ஓட்டி மலரும் நினைவுகளை கொண்டு வந்ததற்கு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.தான் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த போது கடைசியாக மோட்டார் சைக்கிள் ஒட்டியதாக அவர் நினைவு கூர்ந்தார்.

 

ஊர்வலத்தில் துணைப் பிரதமருக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் திரு.வோங் கையெழுத்திட்டார்.அது விற்பனையாளரின் கடையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது