பாதுகாப்பு நடைமுறைகளுடன் பள்ளிகள் மீண்டும் திறப்பு… புன்னகையுடன் பள்ளி வந்த மாணவர்கள்!

Photo: Education Minister Chan Chun Sing Official Facebook Page

 

சிங்கப்பூரில் அரசு மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதேபோல், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் அனைத்து பகுதிகளிலும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், கட்டுப்பாடுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்பட்டு வருவதால், மக்களின் வாழக்கை இயல்பு நிலை திரும்பியுள்ளது. பொதுமக்கள் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

 

தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் உள்ள பள்ளிகள் ஜூன் மாத விடுமுறைக்கு பின் அரசின் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் நேற்று (28/06/2021) மீண்டும் திறக்கப்பட்டன. முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுகிறது. பின்னர் அந்த மாணவர்களுக்கு வகுப்பறையில் சமூக இடைவெளியுடன் கூடிய நிரந்தர இருக்கை ஒதுக்கப்பட்டது. மேலும், சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

அதன்படி, நேரடி வகுப்புகளில் பங்கேற்கும் தொடக்கநிலை 4 முதல் 6, உயர்நிலை 3 முதல் 5, ஜூனியர் கல்லூரிகள் மாணவர்களுக்கும், மில்லெனியா இன்ஸ்டிடியூட் (Millennia Institute) நிலைய மாணவர்களுக்கும் வெவ்வேறு நேரங்களில் இடைவேளை விடப்படும்.

 

உயர்நிலை 1, 2 மாணவர்கள் நாளை (30/06/2021) வரையிலும், வீட்டிலிருந்தப்படியே கல்வி கற்பர். பின்னர், நாளை மறுநாள் (01/07/2021) அந்த மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்குத் திரும்புவார்கள். அதே நேரத்தில், தொடக்கநிலை 1 முதல் 3 வரை மாணவர்கள் ஜூலை 6- ஆம் தேதி வரை வீட்டிலிருந்தப்படியே கல்வி கற்பர்.

 

இந்நிலையில் சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் (Education Minister Chan Chun Sing) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “நம் மாணவர்கள், கல்வியாளர்கள், பள்ளிப் பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்குத் தொடர்ந்து அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

 

இதனிடையே, ஆசிரியர்கள், உணவக விற்பனையாளர்கள் உட்பட பள்ளிகளில் பணியாற்றுவோரில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டுவிட்டனர் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல், தகுதியுள்ள 3,11,000 மாணவர்களில் ஏறக்குறைய 90 சதவீத மாணவர்கள் தடுப்பூசிக்கு முன் பதிவு செய்துள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 92 சதவீத மாணவர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் போட்டுக் கொண்டனர்.

 

சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளின் நிர்வாகங்கள் தங்களது பள்ளி வகுப்பறைகள், கழிப்பறைகள் தினந்தோறும் கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்தல் போன்ற அரசின் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைத் தீவிரமாக கண்காணித்து வருவதாக கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

 

பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் புன்னகையுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள், ஆசிரியர்கள் வகுப்பறையில் நடத்தியப் படங்களை ஆர்வமுடன் கவனித்தனர்.