செங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து- 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

செங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து- 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Photo: SCDF

 

சிங்கப்பூரில் செங்காங் பகுதியில் உள்ள செங்காங் ஈஸ்ட் அவென்யூவில் உள்ள புளோக் 280B அடுக்குமாடி குடியிருப்பில் (280B Sengkang East Avenue) நேற்று (ஜூலை 18) நள்ளிரவு 02.45 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு (Singapore Civil Defence Force-‘SCDF’) தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டது.

மூன்று லாரிகள் மோதி விபத்து: 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவனையில்…

இதையடுத்து, தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் செங்காங் தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பு வீரர்கள் (Sengkang Fire Station) மற்றும் புங்கோல் தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பு வீரர்கள் (Punggol Fire Station), அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் தீ கொளுந்து விட்டு எரிந்தததைக் கண்டனர். மேலும், தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.

இதையடுத்து, தீ விபத்து நிகழ்ந்த வீட்டின் படுக்கையறைக்குள் அதிரடியாக நுழைந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு குழந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள், இரண்டு பெரியவர்கள் என மொத்தம் 5 பேரைப் பத்திரமாக மீட்டனர். இதில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மீட்கப்பட்ட 5 பேரும் புகையை சுவாசித்ததன் காரணமாக, சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆடி மாத பிறப்பையொட்டி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!

பின்னர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். எனினும், வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த புளோக்கில் இருந்த 50 குடியிருப்பாளர்களை காவல்துறையினர் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் பத்திரமாக வெளியேற்றினர்.

இந்த தீ விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், வீட்டில் உள்ள சமையலறையில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்து காரணம் என்பது தெரிய வந்துள்ளது.