மூத்த குடிமக்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிக்கை -சிங்கப்பூரின் மூத்த குடிமக்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிரப்பு த்தொகை

(Photo: Tan Tock Seng Hospital)

சிங்கப்பூரில் முன்னோடித் தலைமுறை மற்றும் மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு அடுத்த மாதத்திலிருந்து மெடிசேவ் நிரப்புத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த தொகையை வயதானவர்கள் ,மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான கட்டணம் ,சிறிய அறுவை சிகிச்சை, அங்கீகரிக்கப்பட்ட வெளி நோயாளி சிகிச்சைக் கட்டணம் போன்றவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

1945-ஆம் ஆண்டுக்கும் 1959-ஆம் ஆண்டுக்கும் இடையில் பிறந்த சிங்கப்பூரர்களுக்கு இந்த நிரப்புத்தொகை வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். சிங்பாஸ் செயலியை பதிவிறக்கம் செய்த மூத்த வயதினருக்கு இம்மாதம் 21-ஆம் தேதிக்குள் நிரப்புத்தொகை குறித்த தகவல் அனுப்பப்படும்.

நிரப்புத்தொகை மூலம் 9,50,000 மூத்தகுடி மக்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர நிரப்புத்தொகையாக 250 வெள்ளி முதல் 900 வெள்ளி வரை வழங்கப்படும். அரசாங்கம் இந்த ஆண்டு 270 மில்லியன் வெள்ளியை மெடிசேவ் நிரப்புத்தொகைக்காக ஒதுக்கியுள்ளதாக நிதி அமைச்சகம் நேற்று கூட்டறிக்கையில் வெளியிட்டது.

இந்த ஆண்டு 83 முதல் 87 வயது வரையிலான சிங்கப்பூரர்களுக்கு மோசமான உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால் ,அவர்களுக்கு வருடந்தோறும் கூடுதலாக 50 வெள்ளி வழங்கப்படும்.88 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு இன்னும் கூடுதலாக 200 வெள்ளி வழங்கப்படும். இந்த கூடுதல் தொகையானது 2025-ஆம் ஆண்டு வரை வழங்கப்படும்.