“மேன்மை தாங்கிய தலைமை மற்றும் சேவை” விருதை சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் பெற்றார்..!

Senior Minister Tharman receives international leadership award

சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் திரு. தர்மன் சண்முகரத்னம் நேற்று வியாழக்கிழமை (அக். 17) அமெரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச நிதி நிறுவனம் (IIF) சார்பாக மேன்மைதாங்கிய தலைமை மற்றும் சேவை விருதைப் பெற்றார்.

சமூக கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராக இருக்கும் திரு. தர்மன், “உலகளாவிய நிதி நிர்வாகம் மற்றும் பொது சேவைக்கு அவர் செய்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக” இந்த விருதைப் பெற்றதாக, பிரதமர் அலுவலகம் செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

விருதைப் பெற்ற திரு. தர்மன் அவர்கள் “IIF நிறுவனத்திடமிருந்து இந்த விருதைப் பெறுவது தனக்கு கிடைத்த பாக்கியம்” என்று கூறினார். இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

விருது தம்மைக் கௌரவப்படுத்துவதாகவும், சிங்கப்பூர் நாணய வாரியத்திலும், அரசாங்கத்திலும், அனைத்துலக அளவிலும் தம்முடன் இணைந்து பணியாற்றியவர்களுக்கு அதில் பங்கிருப்பதாகவும் திரு. தர்மன் குறிப்பிட்டார்.

மீள்-திறன் மிக்க, வளர்ச்சியை இலக்காகக் கொண்ட நிதிச் சந்தைகளை உருவாக்குவதில் அவர்களுடன் இணைந்து பணியாற்றியதை அவர் நினைவுகூர்ந்தார்.

அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த வளர்ச்சிக்கு, அனைத்துலக அளவில் செய்யவேண்டியவை இன்னும் இருப்பதாக அவர் கூறினார்.