சிங்கப்பூரை அபாயம் நெருங்குகிறதா? – உயரும் கடல்நீர்மட்டம்; மூழ்கப்போகும் கடலோரப்பகுதிகள்

Spring Yang Chunzi/Google

புவி வெப்பமயமாதல் விளைவாக காலநிலை நெருக்கடி,கடல்நீர்மட்டம் உயர்வு,கடுமையான வெப்பநிலை போன்றவை ஏற்படுகின்றன.உலக வெப்பமயமாதலால் சிங்கப்பூர் பேரிடரை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக சிங்கப்பூர் புவியியல் விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற சுற்றுச்சூழல் மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பேசினார்.

கடல்நீர் மட்டம் உயரும் நிலையில் தாழ்வான பகுதியில் உள்ள சிங்கப்பூர் அபாயத்தை எதிர்நோக்குகிறது.சிங்கப்பூரின் கடலோரப் பகுதிகளையும் முக்கிய கட்டமைப்புகளையும் பேரிடரிலிருந்து பாதுகாக்க உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள்,அரசாங்கங்கள்,கல்வியாளர்கள் போன்றோர் உதவ முடியும் என்று அவர் கூறினார்.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் கடல்நீர் மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்தால் சிங்கப்பூர் எளிதில் அபாயத்தை சந்திக்கும் நிலை ஏற்படும் என்றார்.எனவே,கடல் தொடர்பான தரவுகளை ஒருங்கிணைத்து கடலோரப் பகுதிகளை பாதுகாப்பதற்கு திட்டமிடுவது சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்,நேற்றைய விழாவில் சிங்கப்பூரில் புவியியல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த உள்ளூர் அமைப்புகள் திட்டங்களை அறிவித்தன.500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்,அரசாங்க அமைப்புகள்,ஆய்வக அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை இந்த அனைத்துலகக் கூட்டமைப்பு ஒன்று திரட்டுகிறது .