2021 முதல் விசித்திர பார்சல்களை பெறும் சிங்கப்பூர் பெண் – யார் அனுப்புறாங்கனே தெரியல !

shopee packages

இ-காமர்ஸ் தளமான Shopee இன் விற்பனையாளர்களிடமிருந்து பல மாதங்களாக விசித்திரமான பேக்கேஜ்களைப் பெறுகிறார் சிங்கப்பூர் பெண் ஒருவர். இன்றுவரை ஸ்டிக்கர்கள், டிஷ்யூ பேப்பர், உலோகத் துண்டுகள் மற்றும் வெற்றுப் பெட்டிகள் போன்ற வினோதமான பொருட்களை பேக்கேஜ்களில் அவளுடைய வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது அவளை மிகவும் விரக்தியடையச் செய்துள்ளது ஏனென்றால், அவளோ, அவளுடைய குடும்பத்தாரோ, நண்பர்களோ இந்த ஆர்டர்கள் எதையும் வைக்கவில்லை. மேலும் ஷாப்பி விற்பனையாளர்களால் தான் துன்புறுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

2021 அக்டோபரில் விசித்திரமான பேக்கேஜ்கள் வரத் தொடங்கியதாகவும், ஆரம்பத்தில் ஒரு பிளாஸ்டிக் விசில், குழந்தை துடைப்பான்கள், டிஷ்யூ பேப்பர் மற்றும் ஸ்டிக்கர்கள் போன்ற பொருட்களைப் பெற்றுள்ளார். அவற்றுள் சில பேக்கேஜ்களில் அனுப்பப்பட்ட உருப்படி, பேக்கேஜ் லேபிளில் குறிப்பிடப்பட்டவற்றுடன் பொருந்தவில்லை என்றும் கூறியுள்ளார். பெறப்பட்ட அனைத்து பேக்கேஜ்களும் ஷாப்பியின் விற்பனையாளர்களிடமிருந்து வந்தவை என்பதைக் குறிக்கின்றது.

அவரது வீட்டில் விசித்திரமான பேக்கேஜ்கள் தோன்றத் தொடங்கியதால், ​​தனது தனிப்பட்ட தகவல்களான வீட்டு முகவரி ஷாப்பி விற்பனையாளர்களிடம் கசிந்த கவலையால் ஷாப்பியைத் தொடர்புகொண்டார். தனது தனிப்பட்ட தகவலை தவறாகப் பயன்படுத்திய விற்பனையாளர் மீது ஷாப்பி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஆனால் விற்பனையாளர் தனது தகவலை முதலில் எப்படிப் பிடித்தார் என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை என்றும் ஷாப்பி  தரப்பில் கூறப்பட்டது. பின்னர் இந்த விஷயத்தை கைவிட்ட அவர், அந்த பிரச்சனை தீர்க்கப்பட்டது என்று நினைத்துள்ளார்.

இருப்பினும், சமீபத்திய வாரங்களில் அந்தப் பெண் மீண்டும் இதே போன்ற கையேடுகள், சிறிய உலோகத் துண்டுகள் மற்றும் வெற்று பெட்டிகள் கொண்ட பேக்கேஜ்களைப் பெறத் தொடங்கியபோது, அவளது எரிச்சல் அதிகரித்தது. மீண்டும் ஷாப்பியை தொடர்பு கொண்ட போது ஷாப்பி தரப்பில் சரியான பதிலளிக்கப்படவில்லை. இது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பற்ற உணர்வை தருவதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.