அதிரடியாக களமிறங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-இந்தியாவிற்கான பயணிகளின் அளவை அதிகரிக்கும் திட்டம்

Getty

சிங்கப்பூரும் இந்தியாவும் நெருங்கிய நட்பு நாடுகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். சிங்கப்பூர் அரசாங்கம் படிப்படியாக Covid-19 தளர்வுகளை அறிவிப்பதைத் தொடர்ந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்கான பயணிகளின் அளவை அதிகரிக்க உள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.இதன் மூலம் அதிக அளவிலான பயணிகள் சிங்கப்பூர் மற்றும் இந்தியா வழியாக பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு கூடிய விரைவில் Airbus A380 ரக விமானங்கள் இயக்கப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. நான்கு வகுப்புகளை உள்ளடக்கியது A380 ரக விமானங்கள் ஆகும். இந்த ரக விமானங்களில் கிட்டத்தட்ட 500 பயணிகள் பயணிக்க முடியும்.

Covid-19 வைரஸ் தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் சிங்கப்பூர் – இந்தியா இடையே பெரிய ரக விமானங்கள் இயக்கப்பட்டன. எனவே அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. ஆனால், Covid-19 வைரஸ் தொற்றின் போது விமானங்களின் அளவை குறைத்ததால் பயணிகளின் அளவும் குறைந்தது.

நாடுகளுக்கிடையே விதிக்கப்பட்டிருந்த எல்லை கட்டுப்பாடுகள் காரணமாக பெரிய ரக விமானங்கள் இயக்கப்படாமல் இருந்தன. தற்சமயம் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளும் Covid-19 கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதால் இரு நாட்டுப் பயணங்கள் புத்துயிர் பெற்றுள்ளன.

கடந்த மூன்று மாதங்களில் சிங்கப்பூருக்கு வருகை புரிந்துள்ள மற்ற நாட்டு பயணிகளின் எண்ணிக்கையை விட இந்திய பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.