சிங்கப்பூர், திமோர்- லெஸ்டே வெளியுறவுத்துறை அமைச்சர்கள் காணொளி மூலம் சந்திப்பு!

Photo: Vivian Balakrishnan Official Twitter Page

 

கடந்த ஜூன் 14- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் திமோர்- லெஸ்டே நாட்டின் வெளியுறவுத்துறை மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் (Timor- Leste Minister Of Foreign Affairs and Cooperation Adaljiza Magno) அடல்ஜிசா மேக்னோ இடையேயான சந்திப்பு காணொளி மூலம் நடைபெற்றது.

 

அப்போது, திமோர்- லெஸ்டே நாட்டின் புதிய வெளியுறவுத்துறை மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் பொறுப்புக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அடல்ஜிசா மேக்னோவுக்கு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். மேலும், சிங்கப்பூர்- திமோர்-லெஸ்டே இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவைக் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் கலந்துரையாடினர். இதனிடையே, சிங்கப்பூர் ஒத்துழைப்பு திட்டத்தின் மூலம் திமோர்- லெஸ்டேவின் திறனை வளர்ப்பதற்கு சிங்கப்பூர் தனது ஆதரவை தொடர்ச்சியாக வழங்கும் என்று சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.

 

இந்த சந்திப்பு குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “காணொளி மூலம் திமோர்-லெஸ்டே நாட்டின் வெளியுறவு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் அடல்ஜிசா மேக்னோவுடன் பேசியதில் மகிழ்ச்சி. அமைச்சர் அடல்ஜிசா மேக்னோ 2016- ஆம் ஆண்டு முதல் 2018- ஆம் ஆண்டு வரை சிங்கப்பூருக்கான திமோர்-லெஸ்டே நாட்டின் தூதராகப் பணியாற்றினார். நான் வெளியுறவுத்துறை அமைச்சரான போது சந்தித்த முதல் வெளிநாட்டு தூதர்களில் ஒருவர். அமைச்சர் அடல்ஜிசா மேக்னோவும், நானும் சிங்கப்பூருக்கும், திமோர்- லெஸ்டேவுக்கும் இடையிலான அன்பான உறவை மீண்டும் உறுதிப்படுத்தினோம்.

 

பெருந்தொற்றையும் மீறி நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம். சிங்கப்பூர் ஒத்துழைப்பு திட்டத்தின் (Singapore Cooperation Programme- ‘SCP’) மூலம் திமோர்- லெஸ்டேவின் திறனை வளர்ப்பதற்கு சிங்கப்பூர் தனது ஆதரவை தொடர்ச்சியாக வழங்கும். இரு நாடுகள் இடையேயான உறவுகளை வலுப்படுத்த அமைச்சர் அடல்ஜிசா மேக்னோவுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.