இந்தோனேசியாவில் அமெரிக்கா உட்பட 13 நாடுகளை உள்ளடக்கிய ராணுவ ஒத்திகையை முடித்த சிங்கப்பூர் ராணுவம் மற்றும் கடற்படை !

Singapore Army

சிங்கப்பூர் ஆயுதப் படை (SAF) ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த துருப்புக்களுடன் இணைந்து பலதரப்பு இராணுவப் பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் (MINDEF) இன்று தெரிவித்துள்ளது.

சூப்பர் கருடா ஷீல்ட் 2022க்கான பயிற்சி இந்தோனேசியாவில் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெற்றது. 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்  இந்தோனேசிய பாதுகாப்புப் படைகள் TNI மற்றும் அமெரிக்காவின் INDOPACOM ஆகியவையால் மட்டுமே பங்கேற்கப்பட்ட வருடாந்திர பயிற்சி இப்போது விரிவாக்கப்பட்ட நோக்கத்தால் சிங்கப்பூர் உட்பட பல நாடுகள் முதல் முறையாக பங்கேற்க வித்திட்டது என பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் இந்தோனேசிய கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படையின் ஆறு கப்பல்களுடன், ரியாவ் தீவுகள், பட்டாம் மற்றும் சிங்கெப் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் தகவல் தொடர்பு பயிற்சிகளில் சிங்கப்பூர்க் கடற்படை (RSN) பங்கேற்றுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயிற்சியானது கூட்டாளி நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிக்க அனுமதித்ததாகவும் நட்புறவுகளை வலுப்படுத்துவதற்கு ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாக அமைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.