சிங்கப்பூர் ஆயுதப்படையில் நீங்களும் பணியாற்றலாம்! – வம்சாவளி எதுவாக இருப்பினும் தேசியச் சேவைக்கான கடமை ஒன்றே!நாடாளுமன்றத்தில் பதிலளித்த அமைச்சர்

Singapore Army (Photo: MINDEF)
சிங்கப்பூரின் இராணுவப் படையில் வருடந்தோறும் முழுநேர தேசிய சேவையில் இணையும் ஐந்து பேரில் ஒருவர் புதிய குடிமகன் அல்லது நிரந்தரவாசி என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் Ng Eng Hen தெரிவித்துள்ளார்.இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த விகிதம் 20 பேருக்கு ஒருவராக இருந்தது.

சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கும் நிலையில்,நிரந்தரவாசிகளையும் புதிய குடிமக்களையும் தேசிய சேவையில் சேர்க்காதிருந்தால் அது சிங்கப்பூர் இராணுவப் படையின் மனிதவளத் தேவைகளில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் கூறினார்.
ஆயுதப் படையில் பாதிக்கும் மேற்பட்டோர் புதிய குடிமகன்கள் என்றும் எஞ்சியோர் நிரந்தரவாசிகள் என்றும் அவர் கூறினார்.ஒவ்வொரு வருடமும் சராசரியாக 3400 புதிய குடிமகன்கள் சிங்கப்பூர் ராணுவப் படையில் பணியாற்றுகின்றனர்.

சிங்கப்பூரின் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் கடந்த மாதம், சிங்கப்பூர் குடிமகனாக விரும்பும் நிரந்தரவாசிகள் அனைவரும் கட்டாயம் தேசிய சேவையாற்றி இருக்க வேண்டும் என்றும் திறமையான நபர்களுக்கு சேவைக் காலத்தை தள்ளிப்போடுவதை எளிதாக்க வேண்டும் அல்லது அதிலிருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்றும் முகநூலில் பதிவிட்டிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் இங், லியோங் பதிவிட்ட கருத்துகள் தவறாக இருப்பதால் அவற்றை திருத்தம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்ததாகக் கூறினார்.ஒருவரின் பிறப்பு,வம்சாவளி எதுவாக இருப்பினும் இளம் குடிமகன்கள் அனைவருக்கும் இராணுவக் கடமைகள் ஒரே மாதிரியாக இருக்குமென்பதில் எந்த கவலையும் கொள்ள வேண்டாம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.