இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: 85 முதியவருக்கு 5,000 சிங்கப்பூர் டாலர் அபராதம்!

Screengrab From Google Street View Of The Incident Location

 

இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்தியதற்காக 85 வயது முதியவருக்கு 5,000 சிங்கப்பூர் டாலர் அபராதமும், ஒரு வருடத்திற்கு வாகனம் ஓட்டவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

கடந்த 2019- ஆம் ஆண்டு செப்டம்பர் 25- ஆம் தேதி அன்று காலை 11.30 மணியளவில் சிங்கப்பூரில் பெடோக் சவுத் சாலையில் உள்ள கார் பார்க்கிங்-ல் இருந்து (Car Park at Block 40, Bedok South Road) கூ டீ வாஹ் (Khoo Tea Wah) என்ற 85 வயது முதியவர் தனது மனைவியுடன் காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது பெடோக் சவுத் அவென்யூ 1-யை (Bedok South Avenue 1) நோக்கி சென்றுக் கொண்டிருந்த கூ டீ வாஹ் இருசக்கர பாதையில் செல்லவிருந்தபோது, அவரது மனைவி “இரு சக்கர வாகனம், இரு சக்கர வாகனம்” என்று கூறி காரை நிறுத்த சொன்னார். இருப்பினும் கூ டீ வாஹ் தொடர்ந்து காரை ஒட்டிக்கொண்டு சென்றதால், அவரது மனைவி மூன்றாவது முறையாக “இரு சக்கர வாகனம்” என்று மீண்டும் கூறினார். அதன் பிறகு அவர் காரை நிறுத்தினார்.

 

எனினும் கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர் மூன்று முதல் நான்கு மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார்.

 

இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த 29 வயதான இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த இளைஞர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த இளைஞருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து 25 நாட்கள் சிகிச்சை அளித்தனர். மேலும், எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு பல அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டது. பின்னர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அந்த இளைஞர் ஒரு வருடத்திற்கும் மேலாக மருத்துவ விடுப்பில் இருந்து வருகிறார்.

 

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று (14/06/2021) நீதிமன்றத்தில் நடைப்பயிற்சி குச்சியுடன் ஆஜரான கூ டீ வாஹ், “கவனக்குறைவான செயலால் விபத்து ஏற்படுத்தியதை ஒப்புக்கொள்கிறேன். நான் தவறு செய்தேன் என்று எனக்கு தெரியும். வயது மூப்பு காரணமாக எனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கோரிக்கை விடுத்தார்.

 

இதையடுத்து, முதியவர் கூ டீ வாஹுக்கு சுமார் 5,000 சிங்கப்பூர் டாலரை அபராதமாக விதித்த நீதிமன்றம், ஒரு வருடத்திற்கு வாகனம் ஓட்டவும் தடை விதித்துள்ளது.

 

கவனக்குறைவான செயலால் விபத்து ஏற்படுத்திய குற்றத்துக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் (அல்லது) 5,000 சிங்கப்பூர் டாலர் அபராதமாக விதிக்கப்படும் (அல்லது) சிறைத்தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.