சட்டவிரோத ஊடுருவல்களைத் தவிர்க்க புதிய ரோந்துப் படகுகள்-சிங்கப்பூரின் கடலோரக் காவல் படையில் அறிமுகம்

pirates coastal areas robbery increases weapons
Pic: AFP

சிங்கப்பூரின் கடலோரக் காவல் படை,சிங்கப்பூர் கடல் பகுதிகளில் எதிர்கொள்ளும் மிரட்டல்களை மிகச் சிறந்த வகையில் திறமையுடன் சமாளிப்பதற்காக அதன் ரோந்துப் படகுகளின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டு வரும் 42 புதிய படகுகளை பிரானி தீவில் உள்ள கடலோரக் காவல் படை தலைமையகத்தில் நேற்று அதிகாரப்பூர்வமாக உள்துறை அமைச்சர் சண்முகம் தொடங்கி வைத்தார்.
சிங்கப்பூரின் கடலோரப் பகுதியைப் பாதுகாக்க பழைய ரோந்துப் படகுகளுக்குப் பதிலாக புதிய ரோந்துப் படகுகள் பணியில் ஈடுபடுத்தப்படும்.

சிங்கப்பூரில் அதிக அளவு கப்பல் போக்குவரத்து மற்றும் கடலோரச்சூழல் காரணமாக தீவிரவாதத் தாக்குதல் மற்றும் சட்டவிரோதக் குடியேறிகள்,வரி செலுத்தாமல் பொருள்கள் கடத்தப்படும் நிகழ்வுகள் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன என்று நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் கடலோரக் காவல்படையை வலுப்படுத்தவில்லை எனில் சிங்கப்பூர் எளிதில் பாதிக்கப்படக் கூடும் என்றார்.சென்ற ஆண்டு கடல் வழியாக சிங்கப்பூருக்குள் நுழைய முயற்சி செய்த 24-சட்ட விரோதக் குடியேறிகள் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூரின் கடல்வழியில் ஊடுருவ முயன்ற 5600-க்கும் மேற்பட்ட படகுகளை அது தடுத்து நிறுத்தியுள்ளது.இதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 15 -க்கும் மேற்பட்ட ஊடுருவல்கள் நடக்கின்றன.சட்டவிரோதக் குடியேறிகளும்,கடத்தல் காரர்களும் தங்களை எளிதில் அடையாளம் காணமுடியாத படகுகளைப் பயன்படுத்துவதாக கூறினார்.

பழைய ரோந்துப் படகுகள் 30 கிமீ வேகத்தில் செல்லக்கூடியவை.ஆனால் புதிய படகுகள் 100 கிமீ வேகத்தில் செல்லக்கூடியவை.கடல்சீற்றத்தின் அதிர்ச்சியைத் தாங்கக்கூடிய இருக்கைகளும் புதிய ரோந்துப் படகுகளில் பொருத்தப்பட்டுள்ளன.