‘போதைப்பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த இளைஞருக்கு சிறை, பிரம்படிகள்’- நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

indian-origin-singapore-jailed

 

போதைப்பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த இளைஞருக்கு சிறைத்தண்டனை மற்றும் பிரம்படிகள் வழங்கி நீதிமன்றம் பரப்பரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

சிங்கப்பூரில் பிளாக் 980 சி புவாங்காக் கிரெசண்ட்டில் (Block 980C Buangkok Crescent) உள்ள ஒரு வீட்டில் வசித்து வருபவர் டெரேக் கோ காய் ஷெங் (Derek Koh Kai Sheng). 23 வயதான இந்த இளைஞர் மீன் வளர்ப்பு தொழிலைச் செய்து வருகிறார். இவருக்கு மூன்று உடன் பிறப்புகள் உள்ளனர். அவரது பெற்றோர் விவாகரத்துப் பெற்றுள்ளனர்.

 

இந்த நிலையில் இந்த இளைஞருக்கு 18 வயதிலிருந்தே போதைப்பொருள் பழக்கம் இருந்ததாகவும், அவ்வப்போது போதைப்பொருளைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

 

இது குறித்து தகவலறிந்த புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4- ஆம் தேதி அன்று டெரேக் கோ காய் ஷெங் வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா அரைப்பான்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வீட்டில் இருந்து சுமார் 77.26 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதையடுத்து, டெரேக் கோ காய் ஷெங்கை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விற்பனை நோக்கங்களுக்காக கஞ்சா வைத்திருந்ததையும், இதனை ஒரு சப்ளையரிடம் இருந்து வாங்கி மற்றவர்களுக்கு விற்பனை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.

 

அதன் தொடர்ச்சியாக, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், டெரேக் கோ காய் ஷெங்க்கு ஐந்தாண்டு 9 மாதம் சிறைத்தண்டனையும், ஐந்து பிரம்படிகளும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.