சிங்கப்பூர் வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் வெளிநாட்டினர்… தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வாய்ப்பு என தகவல்!

Graphix View Covid passport

 

உலகம் முழுவதும் ‘கொரோனா வைரஸ்’ என்ற பெருந்தொற்று ஆட்டிப்படைத்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கொரோனாவின் வைரஸின் இரண்டாவது அலையால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் உள்ள மாநிலங்களின் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக, பல்வேறு நாடுகளும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. மேலும், இந்தியாவின் மத்திய விமான போக்குவரத்து துறையும் (Ministry Of Civil Aviation In India) சர்வதேச விமான பயணங்களுக்கு தடை விதித்திருந்தது. இந்த தடை ஜூன் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சரக்கு விமானங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதேபோல், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காகத் தொடங்கப்பட்ட ‘வந்தே பாரத் மிஷன்’ (Vande Bharat Mission) திட்டத்தின் மூலம் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.

 

இந்த நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதையடுத்து, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் புராதன சின்னங்கள் இன்று (16/06/2021) முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் இந்திய விமான நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். இந்த நிலையில் ஜூன் 30- ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்துக்கு விரைவில் அனுமதிக் கிடைக்கும் என்றும், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விசா வழங்கும் பணிகள் உள்ளிட்டவையை இந்திய அரசு மீண்டும் தொடங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

 

அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசி டோஸ்களை எடுத்துக் கொண்டு, அதற்கான சான்றிதழ் வைத்திருப்போருக்கு சிங்கப்பூர் வருவதற்கு அனுமதி வழங்க அந்நாட்டின் மனிதவள அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சிங்கப்பூரில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், படிப்படியாக கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டின் பொருளாதாரம், தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் நலன் உள்ளிட்டவையைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூர் வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு விசா, வேலை பாஸ் (Work Pass) ஆகியவை வழங்கும் பணியை சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் விரைவில் தொடங்கவிருப்பதாக தகவல் கூறுகின்றன. மேலும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.