இனி தாக்குப்பிடிப்பது கடினம் – சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி!

fish fuel feed seafood price hike in singapore fisher

கோவிட் நெருக்கடிக்கு பிறகு உலக நாடுகள் பலவும், உள்நாட்டுத் தேவையை முதலில் ஈடுகட்டும் விதமாக பல்வேறு உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளன.

இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தது இந்தோனேசியா.

இன்னொரு புறம் மலேசியா கோழிகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. இவை எல்லாம் சிங்கப்பூருக்கு திடீர் நெருக்கடியை ஏற்படுத்தியது.

ஏனெனில், தீவு நாடான சிங்கப்பூரின் கோழிகளுக்கான தேவையில் சுமார் 34 விழுக்காட்டை பூர்த்தி செய்வது மலேசியாதான். 48 சதவிகிதம்  கோழிகள் பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

மலேசியாவில் இருந்து புதிதாக கோழிகளை இறக்குமதி செய்ய முடியவில்லை. அதனால்  ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கோழிகளை வைத்து நிலைமையைச் சமாளிக்கிறது சிங்கப்பூர்.

ஆனால், அந்த கோழிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகளில் வழக்கமான சுவை இல்லை என வாடிக்கையாளர்கள் கூறுவதாக உணவகம் நடத்துவோர் தெரிவிக்கின்றனர்.

ஏற்றுமதி, இறக்குமதி தடைகள் காரணமாக உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பும் தவிர்க்க முடியாததாக உள்ளது.

கடந்த 6 மாதங்களில் மட்டும் சமையல் எண்ணெய், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் விலை, 30 முதல் 45 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

நிலைமை இவ்வாறு இருக்க, உணவுகளின் விலையை உயர்த்தாமல் இருப்பது இயலாத காரியம் என உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக தங்கள் உணவகத்தில் பரிமாறப்படும் சில உணவு வகைகளின் விலையை உயர்த்தியபோது வாடிக்கையாளர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கமும் அச்சமும் தமக்கு இருந்ததாகச் சொல்கிறார் ஜப்பானிய உணவகத்தை நடத்தி வரும் நபர் ஒருவர்.

உணவு வகைகளின் விலையை குறைந்தபட்சம் 20 முதல் 35 விழுக்காடு வரை உயர்த்தினால் மட்டுமே இத்தொழிலில் தாக்குப்பிடிக்கவும் நிலைத்து நிற்கவும் முடியும் என்ற நிலை இருப்பதாக சொல்கிறார்.

ஆனால், இந்த அளவு விலையை உயர்த்தும் பட்சத்தில், தமது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரிப்பார்களா எனும் சந்தேகம் எழுவதாக அவர் கவலைப்படுகிறார்.