வியட்நாம் சென்ற சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

Photo: Singapore Minister Vivian Balakrishnan Official Facebook Page

 

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நான்கு நாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் நாட்டிற்கு சென்றுள்ளார். சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் நேற்று (20/06/2021) வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனோய்க்கு சென்ற வெளியுறவுத்துறை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருடன், வெளியுறவுத்துறை அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

 

அதைத் தொடர்ந்து, வியட்நாம் நாட்டு அதிபர் நுயேன் ஜூவாக் ஃபுக் (President Nguyen Xuan Phuc), பிரதமர் பாம் மின்ஹ் சின்ஹ்(Prime Minister Pham Minh Chinh), துணை பிரதமர் பாம் பின்ஹ் மின்ஹ் (Deputy Prime Minister Pham Binh Minh) ஆகியோரை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சந்திக்கிறார்.

 

அதேபோல், ஹனோய் கட்சியின் செயலாளர் டின்ஹ் தியன் டங், வியட்நாம் தந்தையர் முன்னணி மத்திய குழுவின் தலைவர் டோ வான் சியென் (Vietnam Fatherland Front Central Committee Do Van Chien) மற்றும் சிபிவி வெளியுறவு உறவுகள் ஆணையத்தின் தலைவர் லெ ஹோய் ட்ரங்க் ஆகியோரையும் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சந்திக்கவுள்ளார்.

 

இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனாவுக்கு பிந்தைய மீட்பு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது, கல்வி உள்ளிட்டவைக் குறித்து விவாதிக்க உள்ளனர். மேலும், இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிறது.

 

ஆசியா- ஐரோப்பா கூட்டமைப்பின் (Asia- Europe Partnership) 25- வது ஆண்டு நிறைவையொட்டி, ‘ஆசியா- ஐரோப்பா கூட்டாண்மை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்கும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் உரையாற்ற உள்ளார்.

 

வியட்நாமின் வெளியுறவுத்துறை அமைச்சர் பூய் தான் சன்னின் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் அந்நாட்டுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.