வாடிகனில் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

 

ஜி 20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு இத்தாலியில் இன்று (28/06/2021) மற்றும் நாளை (29/06/2021) ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐந்து நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று (27/06/2021) சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் இத்தாலிக்கு சென்றுள்ளார்.

 

அங்கு ரோம் மற்றும் வாடிகன் நகரங்களுக்கு சென்ற சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், முக்கிய தலைவர்களைச் சந்தித்தார்.

 

இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “வாடிகன் மாநில செயலாளர் கார்டினல் பியட்ரோ பரோலின் (Vatican Secretary of State Cardinal Pietro Parolin) மற்றும் மாநிலங்களுடனான உறவுகளுக்கான வாடிகன் செயலாளர் பேராயர் பால் கல்லாக்ஹர் (Vatican Secretary for Relations with States Archbishop Paul Gallagher) ஆகியோரை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. கடந்த 2019- ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றது.

 

சிங்கப்பூருக்கும், ஹோலி சீக்கும் இடையிலான நல்ல மற்றும் நீண்ட கால உறவுகளை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம். இந்த ஆண்டு சிங்கப்பூரில் கத்தோலிக்க திருச்சபையின் 200- வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். இது 1821- ஆம் ஆண்டு செயின்ட் லாரன்ட் இம்பெர்ட் (St Laurent Imbert) சிங்கப்பூர் வந்ததற்கான தடயங்கள் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1833- ஆம் ஆண்டு சிங்கப்பூரில் முதல் கத்தோலிக்க தேவாலயம் (First Catholic church in Singapore) திறக்கப்பட்டது.

 

சிங்கப்பூர் போன்ற பல இன, மத நாடுகளில் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சமூகங்களிடையே அமைதி, புரிதல் மற்றும் சகிப்புத்தன்மையை நாம் அனைவரும் மதிக்கிறோம். பல ஆண்டுகளாக சிங்கப்பூர் சமுதாயத்திற்கு கத்தோலிக்க திருச்சபை மற்றும் சமூகம் அளித்த பங்களிப்புகளுக்கு நான் பாராட்டு தெரிவித்தேன்”. இவ்வாறு அமைச்சர் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.