என்னங்க நடக்குது இங்க? வாரத்திற்கு 50 லட்சம் கொசுக்களை உற்பத்தி செய்யும் சிங்கப்பூர் அரசு!

மலேரியா, டெங்கு காய்ச்சல் இந்த இரண்டு நோய்களையும் பரப்பும் முக்கிய நோய் கடத்தியாக கொசு உள்ளது. சிங்கப்பூரில் நடப்பு ஆண்டில் 1,400 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

மேலும் வரும் மாதங்களில் டெங்கு பரவல் இன்னும் அதிகரித்து காணப்படும் என மருத்துவ நிபுனர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பெரும் பாதிப்பு ஏற்படும் முன்பே பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிங்கப்பூர் அரசு இறங்கியுள்ளது.

ஒல்பேச்சியா என்ற திட்டத்தின் மூலம் டெங்கு பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய கொசுக்களை அழிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது சிங்கப்பூர் அரசு.

இது பிரபலமான மலட்டு தன்மைகொண்ட கொசுக்களை உருவாக்கும் செயல்முறையாகும்.

அவ்வாறு ஒல்பேச்சியா பேக்டீரியாவை கொசுக்களில் பரவவிட்டு, மலட்டு தன்மைகொண்ட கொசுக்களை உருவாக்க முடியும்.

அது மற்ற நோய் பரப்பும் பெண் கொசுக்களுடன் இணையும்போது அவை இடும் முட்டைகள் பொரியாது.

இந்த செயல் முறை இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் என்ற ஆராய்ச்சியின் முடிவுகளின் அடிப்படையில் பல ஆண்டுகளாக பின்பற்ற வருகிறது .

இதுபற்றி அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறும்போது, தொடக்கத்தில் ஒவ்வொரு வாரமும் 20 லட்சம் மலட்டு கொசுக்கள் உற்பத்தி செய்யப்படும்.

அதன்பின்னர், வாரத்திற்கு 50 லட்சம் ஏடிஸ் கொசுக்கள் என இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என கூறினார்.

டெங்குவை கட்டுப்படுத்தும் நோக்கில், இயற்கையாக உருவான கொசுக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இந்த சிறப்பு கொசுக்கள் ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.