சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவுக்கு வெற்றிகரமாக நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை!

Photo: Rohini Acharya Official Twitter Page

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய ரயில்வேத்துறை அமைச்சரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், தனது உடல்நலக்குறைவு காரணமாக, சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டியிருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், சிங்கப்பூர் சென்று சிகிச்சைப் பெறவும் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.

‘மதுரை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இதையடுத்து, லாலு பிரசாத் யாதவை அவரது குடும்பத்தினர், சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு முழு உடல் பரிசோதனையை மேற்கொண்ட மருத்துவர்கள், லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தனர். இதைத் தொடர்ந்து, லாலு பிரசாத் யாதவ் டெல்லி திரும்பினார். பின்னர், டெல்லியில் உள்ள தனது மகளின் இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில், தனது தந்தைக்கு சிறுநீரகத்தைத் தானமாக வழங்க தயாராக இருப்பதாக, லாலு பிரசாத் யாதவின் மகள் ரோஹிணி ஆச்சார்யா தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அவருக்கு முறைப்படி, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக, லாலு பிரசாத் யாதவ் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு ஸ்ரீ சிவன் கோயிலில் சிறப்பு பூஜைகள்!

அதைத் தொடர்ந்து, நேற்று (06/12/2022) சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இது குறித்து லாலு பிரசாத் யாதவின் மகனும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தனது தந்தையும், மூத்த சகோதரி ரோஹிணி ஆச்சார்யா ஆகியோர் நலமாக உள்ளனர். தனது தந்தைக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் லாலு பிரசாத் யாதவ் பூரண குணமடைய வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ்வை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, லாலுவின் உடல்நிலைக் குறித்து கேட்டறிந்தார்.