சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நண்பரையே ஏமாற்றிய சென்னை இளைஞர் கைது!

Photo: Wikipedia

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏமாற்றி பணம் பறித்த இளைஞரை நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் மலேசியாவுக்கு செல்கிறார்!

நாகர்கோவில் அருகே பள்ளம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் சாம்சன். இவர் வேலை வாய்ப்பு இல்லாமல், அவதிப்பட்டு வந்த நிலையில், கல்லூரி கால நண்பர், அவருக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறியுள்ளார்.

அவரது வார்த்தைகளை நம்பியுள்ள சாம்சன் கல்லூரி நண்பரிடம், 1.75 லட்சம் ரூபாயை வங்கி மூலமாகக் கொடுத்துள்ளார். பின்னர், வேலையும் வாங்கிக் கொடுக்காமல், பணத்தையும் திரும்பக் கொடுக்காமல் அவரது நண்பர் ஏமாற்றி வந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலம் என்பதால், வேலை வாய்ப்பு தள்ளிப் போவதாக, காரணங்களைக் காட்டி ஏமாற்றி வந்துள்ளார். ஆனால், கொரோனா காலம் முடிந்தும் வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் நண்பர் இழுத்தடித்து வந்ததால், பாதிக்கப்பட்ட சாம்சன் நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

“இந்தப் பாரம்பரிய அறுவடைத் திருவிழா தமிழ்நாட்டில் தோன்றியது”- பொங்கல் தின வாழ்த்துத் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர்!

இதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்பவரை அதிரடியாக கைது செய்தனர்.

முஜிபுர் ரஹ்மானிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் நேரிலும், ஆன்லைன் மூலமாகவும், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பலரை ஏமாற்றி வந்தது தெரிய வந்தது. ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடி சம்மந்தமாக, சமூக வலைத்தளங்கள் வழியாக, தொடர்ச்சியாக மாவட்ட காவல்துறை சார்பில், பல சமயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் இதுப்போன்று பணத்தைக் கொடுத்து ஏமாறுபவர்கள் இருந்து வருவது தொடர் கதையாகியுள்ளது.

ஆன்லைனில் வேலை வாய்ப்பு அளிப்பதாகக் கூறும், மோசடி பேர் வழிகளிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறான மோசடி இணையதளங்களை நம்பி ஆன்லைனில் பணத்தைச் செலுத்தக் கூடாது என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.