மலேசியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளவிருக்கும் சிங்கப்பூரர் – மலேசிய காதலியுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போது கைது !

singapore man death penalty

ஆகஸ்ட் 9, 2022 அன்று 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் பிடிபட்ட சிங்கப்பூரர் ஒருவர் மலேசியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளவிருக்கிறார்.

49 வயதான சிங்கப்பூரர் Loh, அவரது மலேசிய காதலியான 32 வயதான Soh உடன் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் ஜோகூரில் உள்ள நீதிமன்றத்தில் போதைப்பொருள் கடத்தியதாக ஆகஸ்ட் 18 அன்று இந்த ஜோடியின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. Loh மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகளையும் Soh இரண்டு குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கின்றனர்.

Forest City அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த தம்பதியினர், ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 11.15 மணியளவில் போதைப்பொருளுடன் பிடிபட்டனர். அப்போது அவர்கள் 9.625 கிலோ மெத்தாம்பெட்டமைன் (மெத்) கடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களிடம் இருந்து 666 கிராம் கெட்டமைனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், Loh மற்றும் Soh 11 கிலோ மெத்தாம்பேட்டமைன், 766 கிராம் கெட்டமைன் மற்றும் 139 கிராம் நிமெட்டாசெபம் ஆகியவற்றுடன் பிடிபட்டனர்.

மலேசிய சட்டத்தின்படி, போதைப்பொருள் கடத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 15 சாட்டையடிகள் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும். போதைப்பொருட்களை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்ததற்காக தண்டிக்கப்படுபவர்களுக்கு RM100,000 (S$31,000)க்கு மிகாமல் அபராதம், ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இவர்களின் ஜாமீன் மலேசிய நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த நீதிமன்றக் குறிப்பு மலேசிய உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 20, 2022 அன்று திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது