30க்குள் 30 : சிங்கப்பூர் அரசாங்கம் நிர்ணயித்துள்ள புதிய இலக்கு – அதற்குள்ளாவது விடிவு பிறக்குமா?

Singapore fish stall seafood
Pic: AFP/Roslan Rahman

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 30 சதவிகிதம் உணவுப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என சிங்கப்பூர் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக 30க்குள் – 30 (30 by 30) என்ற திட்டத்தை வகுத்துள்ளது.

இந்த திட்டமானது, சுய உற்பத்தித்திட்டம் எனப்படுகிறது. நெருக்கடியான தருணங்களில் ஓரளவு கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது.  ஆனால் நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதிகளுக்கு மாற்றாக அமைந்துவிடாது என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியையும், குடும்பங்களின் சராசரி வருமான்தையும் அதிகரிப்பதற்கான திட்டங்களில் முதலீடு செய்வதிலேயே சிங்கப்பூர் அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது. மாறாக, வேளாண் நடவடிக்கைகளில் முதலீடுகள் செய்யப்படவில்லை.

எனவே, பணம் இருக்கும் வரையிலும் விநியோகச் சங்கிலியில் எந்தவித தடையும் ஏற்படாத வரையிலும் தேவையான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய இயலும் என்பதே சிங்கப்பூர் அரசாங்கத்தின் திட்டமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, சிங்கப்பூரில் செயற்கை உணவுப் பொருள் திட்டம் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன் எதிரொலியாக, மிகப்பெரிய செயற்கைக் கோழி இறைச்சி உற்பத்தி மையம் ஒன்று நிறுவப்பட உள்ளது.

30 விழுக்காடு உணவுப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான திட்டத்துக்கு இத்தகைய முயற்சிகள் கைகொடுக்கும் என்றாலும், இயற்கையான உணவுக்கு முன்னுரிமை என்று மக்கள் முடிவெடுக்கும்போது சிக்கல் எழக்கூடும்.

மேலும், உள்நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களின் விலையானது, இறக்குமதி செய்யப்படும் பொருட்களைவிட குறைவாக இருப்பதும் முக்கியம்.

இல்லையெனில், மக்கள் உள்நாட்டு உணவுப் பொருட்களை ஒதுக்கும் வாய்ப்புண்டு. இல்லையெனில், அப்பொருட்களுக்கு அரசாங்கம் மானியம் அளிக்க வேண்டியிருக்கும் என்பதும் நிபுணர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.