வியட்நாம் தலைவர்களைச் சந்தித்த சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

 

சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நான்கு நாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் நாட்டிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றார். அமைச்சருடன் சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் வியட்நாமிற்கு சென்றனர்.

 

வியட்நாம் தலைநகர் ஹனோய்க்கு சென்ற சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், வியட்நாம் நாட்டின் அதிபர் நுயேன் ஜுவான் ஃபுக் (President Nguyen Xuan Phuc), பிரதமர் பாம் மின்ஹ் சின்ஹ், துணை பிரதமர் பாம் பின்ஹ் மின்ஹ் , வெளியுறவுத்துறை அமைச்சர் புய் தன்ஹ் சன், வியட்நாமின் தந்தையர் முன்னணி மத்திய குழுத் தலைவர் டோ வான் சியென் (Vietnam Fatherland Front Central Committee President Do Van Chien) ஆகியோரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.

 

சிங்கப்பூர்- வியட்நாம் இடையே வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு நாடுகளிடையேயான உறவுகளை மேம்படுத்துவது, கொரோனா பாதிப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல் கூறுகின்றன. இதில் வியட்நாம் நாட்டு மாணவர்கள் சிங்கப்பூர் வந்து படிக்கும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு கையெழுத்தானது. மேலும், பயணத்தைப் பாதுகாப்பாகத் தொடங்குவதற்கு சுகாதார சான்றிதழ்களைப் பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கும் இரு நாட்டு அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.

 

பின்னர், வியட்நாமில் நடைபெற்ற ஆசிய- ஐரோப்பிய (Asia-Europe Meeting- ‘ASEM’) உயர் மட்டத்திலான கூட்டத்தில் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.