சிங்கப்பூரில் மேலும் 300- க்கும் மேற்பட்ட மறுசுழற்சித் தொட்டிகள்!

Photo: National Environment Agency

ஜூலை 1- ஆம் தேதி முதல் 300- க்கும் மேற்பட்ட மின் மற்றும் மின்னணு கழிவுகளுக்கான (e-waste) மறுசுழற்சித் தொட்டிகள் (Recycling bins) சிங்கப்பூரில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் வைக்கப்படும் என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (National Environment Agency- NEA) தெரிவித்துள்ளது.

 

இந்த நடவடிக்கை தேசிய சுற்றுச்சூழல் நிறுவனத்தின் (National Environment Agency) மின் கழிவு (e-waste) விரிவாக்கப்பட்டத் தயாரிப்பாளர் பொறுப்பு (Extended Producer Responsibility- EPR) திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது ஜூன் 4- ஆம் தேதி மென்மையான துவக்கத்துடன் தொடங்கியது.

 

பொதுமக்கள் தங்கள் மின் கழிவுகளை (e-waste) இந்த தொட்டிகளில் மறுசுழற்சி செய்யும் போது, அவர்களுக்கு ஷாப்பிங் வவுச்சர்களுக்கான (Shopping Vouchers) புள்ளிகள் கிடைக்கும். அந்த வவுச்சர் புள்ளிகளை வைத்து பொதுமக்கள் கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

 

பொதுமக்கள் தங்கள் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப உபகரணங்களைப் போடுவதற்கு தற்போது நான்கு இடங்களில் மறுசுழற்சித் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட டைரி ஃபார்ம் குரூப் (Dairy Farm Group) மற்றும் ஹார்வி நார்மன் (Harvey Norman) விற்பனை நிலையங்களில் மறுசுழற்சித் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

 

கணினிகள், மடிக்கணினிகள், கையடக்கக்கணினிகள், கணினித்திரைகள், மின் விளக்குகள், செட்-டாப் பாக்ஸ்கள், பிரிண்டர்ஸ் மெஷின்கள், செல்போன்கள், சிறிய பேட்டரிகள் உள்ளிட்ட மின் கழிவுகளை (e-waste) பொதுமக்கள் மறுசுழற்சித் தொட்டியில் போடலாம் என தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்துள்ளது.