சிங்கப்பூர் அரசியலில் அந்நிய சக்திகளின் தலையீடுகள் – இனி யாரும் நெருங்க முடியாத அளவிற்கு நடப்பிற்கு வந்த புதிய சட்டம்

(Photo : ABC)

சிங்கப்பூர் அரசியலில் அந்நிய சக்திகள் தலையிடுவதைத் தடுக்கும் சட்டம் இன்றுமுதல் நடப்புக்கு வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ‘பிக்கா’ எனப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரின் உள்நாட்டு அரசியலில் அந்நிய சக்திகளின் தலையீட்டு முயற்சிகள் குறித்து விசாரணை நடத்துமாறு சமூக வலைதளங்களுக்கும்,இணைய சேவை வழங்குநர்களுக்கும் அதிகாரிகள் உத்தரவிட இயலும்.

போலியான கணக்குகள், ‘போட்’ எனப்படும் இணைய இயந்திர மனிதர்கள் போன்றவை மூலம் மக்களிடையே அரசியல் பற்றிய தவறான தோற்றத்தை உருவாக்கி,சமூகத்தில் கலவரத்தை ஏற்படுத்தவும்,சிங்கப்பூரின் இறையாண்மையை சீர்குலைக்கவும் அந்த வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்யலாம்.

இதுபோன்ற பிரசாரங்களை முறியடிக்கும் அம்சங்களை ‘பிக்கா’ சட்டம் கொண்டிருக்கிறது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இச்சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

கடந்த 2018-ஆம் ஆண்டு இன்னொரு நாட்டுடன் சிங்கப்பூர் இருதரப்புப் பிரச்சினைகளை எதிர்கொண்ட போது,சமூக வலைதளங்களில் அதிகளவிலான கருத்துகள் சிங்கப்பூரைக் குறைகூறி பதிவிடப்பட்டதை அமைச்சகம் குறிப்பிட்டது.

போலியான கணக்குகள் மூலம் பதிவிடப்பட்ட அக்கருத்துகள் சிங்கப்பூரின் நிலைப்பாடுகளுக்கு எதிரான செயற்கை தோற்றத்தை உருவாக்க முயன்றன என்று அமைச்சகம் தெரிவித்தது

பல வருடங்களாக செயல்படாமலிருந்த ஊடகக் கணக்குகள் மூலம் கருத்துகள் மற்றும் காணொளிகள் பதிவேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.அந்தக் கருத்துக்கள் உரையாடல் செயலிகள் வழியாகவும் தீவிரமாகப் பகிரப்பட்டு,சிங்கப்பூரர்களுக்கு இடையே உணர்வுப்பூர்வமாகத் தாக்கத்தை ஏற்படுத்த முனைந்தன என்றும் அமைச்சகம் விளக்கியது.