சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்தவருக்கு கொரோனா உறுதி!

Photo: GoogleMaps

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ‘ஓமிக்ரான்’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட 25- க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியைப் போடும் பணியை முடுக்கிவிட்டுள்ள உலக நாடுகள், ‘ஓமிக்ரான்’ பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சிங்கப்பூர் to திருச்சி வந்த 140 பேர்: “வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது” – கண்காணிக்கும் அதிகாரிகள்

குறிப்பாக, இந்தியாவில் ‘ஓமிக்ரான்’ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன்படி, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஹாங்காங், சீனா, இஸ்ரேல், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, பிரேசில், மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பை அந்தந்த மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள கோவை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட நான்கு சர்வதேச விமான நிலையங்களில் ரிஸ்க் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மட்டுமின்றி, மற்ற நாடுகளில் இருந்தும் வருபவர்களுக்கு கொரோனா RTPCR அல்லது ART கொரோனா பரிசோதனைகளைக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெளிநாட்டு பயணிகளைத் தீவிரமாகக் கண்காணிக்கும் வகையில், நான்கு சர்வதேச விமான நிலையங்களுக்கும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

“சிங்கப்பூர் டாப்” – உலகின் “மிகவும் செலவுமிக்க” நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் 2வது இடம்!

இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்தவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சுகாதாரத்துறையினர் உடனடியாக, அவரை ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அத்துடன், அவரின் சளி மாதிரியைச் சேகரித்த மருத்துவர்கள், ‘ஓமிக்ரான்’ கொரோனாவா என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னை கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு மாதிரியை அனுப்பி வைத்தனர். மேலும், அவருடன் மதுரைக்கு வந்த அவரது மனைவி, மகனுக்கு பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, அவர்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர். இவர்கள் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், அந்த நபர் வந்த விமானத்தில் பயணித்த அனைவரும் தங்களை 15 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு ‘ஓமிக்ரான்’ உறுதியாகியுள்ளது என்பது நினைவுக்கூறத்தக்கது.